;
Athirady Tamil News

காணிகளை அன்பளிப்போர் மத்திய அரசுக்கு வழங்குவதை தவிர்த்து உள்ளுராட்சி மன்றங்களுக்கு அன்பளிப்பதே இனம்சார் பாதுகாப்பானது!

0

அரசுக்கு காணிகளை அன்பளிப்போர் மத்திய அரச தாபனங்களுக்கு
வழங்குவதை தவிர்த்து உள்ளுராட்சி மன்றங்களுக்கு அன்பளிப்பதே இனம்சார் பாதுகாப்பானது!

– நீர்வேலி தமிழ் முற்ற திறப்பு விழாவில் முன்னாள் தவிசாளர் நிரோஷ்

மக்கள் பங்கேற்பு அபிவிருத்தி என்ற எண்ணக்கருவுடன் மக்கள் பங்களிப்பு அபிவிருத்தித் திட்டங்களை வகுத்துச் செயற்படுத்துவதிலும் அரச தாபனங்கள் சிரத்தை எடுக்குமாயின் கிராம மட்ட உட்கட்டுமானங்களை விருத்தி செய்வது இலகுவாக அமையும் என வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.

நீர்வேலியில் இன்று சனிக்கிழமை (10) இடம்பெற்ற தமிழ் முற்றம் மற்றும் தபாலகக் கட்டிடத் திறப்பு விழாவில் விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும்,

நீர்வேலி மண் தமிழ் மக்களின் பாரம்பரியத்திற்கு உரிய மண்ணாகும். இந்த மண்ணில் தமிழ் முற்றத்தினை அமைக்க வேண்டும் என நான் தவிசாளராக பதவி வகித்த காலத்தில் அவை தீர்மானம் உள்ளிட்ட பூர்வாங்க ஏற்பாடுகளை மேற்கொண்டேன். இந்நிலையில் ஏற்கனவே நீர்வேலியில் தபாலகத்திற்கான கட்டிடத்தினை தனது கொடையாக அமைத்து வழங்குவதற்கான செயற்றிட்டத்தினை ஆரம்பித்திருந்த தொழிலதிபர் கிருபாகரன் அவர்கள் தமிழ் முற்றத்தினை அமைத்து அதில் பெரியார்களின் சிலைகளை நிறுவும் பொறுப்பினையும் தானே முன்வந்து ஏற்றுக் கொண்டு அதனை தற்போது அவர் முழுமையாகச் செயற்படுத்தியுள்ளார். அவரது முற்போக்கான கொடை எண்ணத்திற்கும் செயற்பாட்டுக்கும் பாராட்டுக்கள்.

இதற்காக அவருடன் உழைத்த ஓய்வுநிலை கல்விப் பணிப்பாளர் இ.குணநாதன் தலைமையில் குழுவினர்க்கு நன்றிகள். இன்றைய கால கட்டத்தில் அரசினால் மேற்கொள்ளப்படவேண்டிய அபிவிருத்திகள் பல நிதி பற்றாக்குறை மற்றும் அவற்றை செயற்படுத்துவதில் உள்ள செலவீனங்களை ஒழுங்குபடுத்துவதிலும் அவற்றை நிர்வாக ரீதியில் சட்ட திட்டங்களுக்கு உள்ளாக அணுவதில் காணப்படும் தாமதங்கள் வாயிலாக விரைவாக ஈடேற்றுவதில் இழுபறிகள் உள்ளன.

இந் நிலையில் மக்களுக்கு வேண்டிய எமது இனத்தின் பண்பாடு கலாச்சாரம் வரலாறு போன்றவற்றினை நிலைநிறுத்தத் தக்க செயற்றிட்டங்களை கொடையாளர்களிடம் கையளித்து அவற்றை மக்கள் மயப்படுத்துவது சிறந்த உத்தியாகும். அரச நிறுவனம் மேற்கோள்ளும் அபிவிருத்தியில் பங்கேற்பு அபிவிருத்தி என்பதற்கு மேலாகச் சென்று மக்களின் பங்களிப்பாக அபிவிரு;தியை முன்கொண்டு செல்வதும் அவசியமாகவுள்ளது. அது தனவந்தர்கள் கொடையாளிகளை கிராம மட்டத்தில் இணைப்பதாக அமையும்.

இதேநேரம் இன்று பலர் அரச தாபனங்களுக்கு தமது சொத்துக்களை நன்கொடை அளிக்க முன்வருகையில், அவ்வாறான சூழ்நிலைகளில் மத்திய அரசாங்கம் சார்ந்த தாபனங்களுக்கு அன்பளிப்பது இன முரன்பாடும் பல்வேறு பட்ட ஆக்கிரமிப்பினையும் எதிர்கொள்ளும் இனம் நாம் என்ற வகையில் சரியான தீர்மானம் இல்லை. மேலும், மத்திய அரசின் தாபனங்கள் கொழும்பு மட்ட முடிவுகளுக்கு கட்டுப்பட்டு செயற்படலாம். ஆனால், உள்ளுராட்சி மன்றத்திற்கு நிலங்களை அன்பளித்தால் அதில் எமது மக்கள் பிரதிநிதிகளின் முடிவே செல்வாக்குச் செலுத்தும். மத்திய அரசு சார்ந்த தாபனங்களுக்கு காணித் தேவை காணப்படின் அவற்றை உள்ளுராட்சி மன்றங்களுக்கு கையளித்து குறித்த உள்ளுராட்சி மன்றங்கள் மத்திய அரசின் தாபனங்களுக்கு வாடகைக்கு விட முடியும். இதன் வாயிலாக எமது நிலம் சார்ந்த இன ரீதியிலான பாதுகாப்பினை நாம் உறுதிப்படுத்த முடியும். இவ்வாறு முன்னாள் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.