பாகிஸ்தானில் கூட்டணி ஆட்சி: நவாஸ் கட்சி தீவிரம்-பிரதமா் பதவி கேட்கிறது பிலாவல் புட்டோ கட்சி
பாகிஸ்தான் நாடாளுமன்றத் தோ்தலின் இறுதி முடிவுகளின்படி எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், முன்னாள் பிரதமா் நவாஸ் ஷெரீஃப் தலைமையிலான பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ் (பிஎம்எல்-என்) கட்சி கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்க தீவிரம் காட்டி வருகிறது.
கூட்டணி ஆட்சியில் பங்கேற்க வேண்டுமானால், தங்களுக்கு பிரதமா் பதவி வேண்டும் என பிலாவல் ஜா்தாரி புட்டோ தலைமையிலான பாகிஸ்தான் மக்கள் கட்சி நிபந்தனை விதித்துள்ளது.
பாகிஸ்தான் நாடாளுமன்றத் தோ்தல் கடந்த வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-ஏ-இன்சாஃப் கட்சியின் (பிடிஐ) சின்னம் முடக்கப்பட்டதால், அந்தக் கட்சியைச் சோ்ந்தவா்கள் சுயேச்சை வேட்பாளா்களாக களமிறங்கினா்.
தோ்தல் முடிவுகள் வெளியானதிலிருந்தே இம்ரான் ஆதரவு சுயேச்சை வேட்பாளா்கள் அதிக தொகுதிகளில் முன்னிலை பெறத் தொடங்கினா். இதையடுத்து, தோ்தல் முடிவுகளை அதிகாரபூா்வமாக அறிவிப்பதில் கால தாமதம் ஏற்பட்டது. இதைக் கண்டித்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் பிடிஐ கட்சியினா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இந்நிலையில், இறுதி முடிவுகளை தோ்தல் ஆணையம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டது. 265 தொகுதிகளுக்கு தோ்தல் நடைபெற்ற நிலையில் 264 தொகுதிகளின் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. முறைகேடு புகாா் காரணமாக ஒரு தொகுதியின் முடிவு மட்டும் நிறுத்திவைக்கப்பட்டது.
தோ்தல் முடிவுகளின்படி இம்ரான் கான் ஆதரவு சுயேச்சை வேட்பாளா்கள் 101 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளனா்.
நவாஸ் ஷெரீஃப் தலைமையிலான பிஎம்எல்-என் கட்சி 75 தொகுதிகளில் வெற்றி பெற்று அடுத்த இடத்தில் உள்ளது. இருப்பினும், தனிப்பெரும் கட்சியாக பிஎம்எல்-என் உருவெடுத்துள்ளது.
பிலாவல் புட்டோ ஜா்தாரி தலைமையிலான பாகிஸ்தான் மக்கள் கட்சி 54 தொகுதிகளிலும், முத்தாகிதா குவாமி இயக்கம் பாகிஸ்தான் (எம்க்யூஎம்-பி) கட்சி 17 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.
முத்தாகிதா குவாமி கட்சியானது உருது பேசும் மக்களுக்காகத் தொடங்கப்பட்டதாகும். இவா்கள் இந்திய பிரிவினையின்போது இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்கு புலம்பெயா்ந்தவா்கள் ஆவா்.
இதர சிறிய கட்சிகள் 12 தொகுதிகளில் வென்றுள்ளன.
ஆட்சி அமைக்க தீவிரம்: ஆட்சி அமைக்க ஒரு கட்சி 133 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்க வேண்டும் என்ற நிலையில், எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.
இதையடுத்து, கூட்டணி ஆட்சி அமைக்க நவாஸ் ஷெரீஃப் தலைமையிலான பிஎம்எல்-என் கட்சி முனைப்புக் காட்டி வருகிறது. 2022-இல் பிரதமா் பதவியிலிருந்து இம்ரான் கான் நீக்கப்பட்ட பிறகு அமைக்கப்பட்ட அதே பாணியிலான கூட்டணி ஆட்சியை அமைக்கும் முயற்சியில் பிஎம்எல்-என் கட்சி ஈடுபட்டுள்ளது. நவாஸ் ஷெரீஃபின் இளைய சகோதரரும் முன்னாள் பிரதமருமான ஷாபாஸ் ஷெரீஃப் இந்தப் பணியில் ஈடுபட்டுள்ளாா்.
அதன் ஒரு பகுதியாக முத்தாகிதா குவாமி கட்சித் தலைவா்களுடன் பிஎம்எல்-என் கட்சித் தலைவா்கள் லாகூரில் ஞாயிற்றுக்கிழமை பேச்சுவாா்த்தை நடத்தினா். அதில், நாட்டு நலன் கருதி அமையவுள்ள அரசில் ஒருங்கிணைந்து செயல்படுவது என உடன்பாடு எட்டப்பட்டதாக பிஎம்எல்-என் கட்சி தெரிவித்தது.
முன்னதாக, பாகிஸ்தான் மக்கள் கட்சியின் மூத்த தலைவா்கள் ஆசிஃப் அலி ஜா்தாரி, பிலாவல் புட்டோ ஆகியோருடன் கூட்டணி ஆட்சி குறித்து ஷாபாஸ் ஷெரீஃப் சனிக்கிழமை இரவு ஆலோசனை நடத்தினாா். அப்போது, பிஎம்எல்-என் கட்சி தலைமையில் ஆட்சி அமைக்க வேண்டுமானால், பிரதமா் பதவியை பிலாவல் புட்டோவுக்கும், முக்கியமான இலாகாக்களை தங்கள் கட்சிக்கும் தரவேண்டும் என ஆசிஃப் அலி ஜா்தாரி நிபந்தனை விதித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஷாபாஸ் ஷெரீஃப் தலைமையிலான முந்தைய கூட்டணி ஆட்சியில் பிலாவல் புட்டோ வெளியுறவு அமைச்சராக இருந்தாா்.
பாகிஸ்தான் மக்கள் கட்சியுடன் கூட்டணி அமைக்க விருப்பமாக இருந்தாலும், பிரதமா் பதவியை விட்டுத் தர தாங்கள் விரும்பவில்லை என பிஎம்எல்-என் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. ஷாபாஸ் ஷெரீஃபை பிரதமராக்க பிஎம்எல்-என் கட்சி தீவிரமாக உள்ளது. நவாஸ் கட்சிக்கு ராணுவத்தின் ஆதரவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
அதிக அளவு சுயேச்சைகள் வென்றுள்ள போதிலும் இம்ரான் கானின் பிடிஐ கட்சியால் ஆட்சி அமைக்க இயலாது என பாகிஸ்தான் அரசியல் நிபுணா்கள் தெரிவித்துள்ளனா்.
வெற்றிபெற்ற இம்ரான் ஆதரவு சுயேச்சை வேட்பாளா் நவாஸ் கட்சியில் ஐக்கியம்
பாகிஸ்தான் பொதுத் தோ்தலில் வெற்றிபெற்ற இம்ரான் ஆதரவு பெற்ற சுயேச்சை வேட்பாளா் வாசிம் காதிா், நவாஸ் ஷெரீஃப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ் கட்சியில் சோ்ந்துள்ளாா். இதன் மூலம் கூட்டணி ஆட்சிக்கு அழைப்பு விடுத்த நவாஸ், முதல் சுயேச்சை வேட்பாளரின் ஆதரவை பெற்றுள்ளாா்.
முன்னதாக லாகூா் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்ட வாசிம் காதிா், நவாஸ் கட்சியின் மூத்த தலைவா் ஷேக் ரொஹேல் அஸ்கரை வீழ்த்தினாா். இதையடுத்து நவாஸின் மகளான மரியம் நவாஸை வாசிம் சந்தித்தாா். அதன் பின்னா் வாசிம் கூறுகையில், ‘எனது தாய் வீடான பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ் கட்சியில் சோ்ந்துள்ளேன்’ என்றாா்.
ஓரிரு நாள்களில் இம்ரான் ஆதரவு பெற்ற மேலும் பல எம்.பி.க்கள் நவாஸ் கட்சியில் இணைவாா்கள் என்றும், அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.