;
Athirady Tamil News

Dexit: ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறுமா ஜேர்மனி?

0

பிரித்தானியாவைத் தொடர்ந்து ஜேர்மனியும் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறவேண்டுமென அந்நாட்டின் பிரபல அரசியல்வாதி ஒருவர் அழைப்பு விடுத்துள்ள விடயம் பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளது.

பிரெக்சிட்டைத் தொடர்ந்து டெக்சிட்?
பிரித்தானியா, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேற எடுத்த முடிவு மிகச்சரியானது என்று கூறியுள்ள ஜேர்மனியின் இரண்டாவது பெரிய கட்சியான Alternative for Germany (AfD)யின் தலைவர்களில் ஒருவரான Alice Weidel, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறலாமா வேண்டாமா என மக்கள் முடிவு செய்யும் வகையில், ஜேர்மனியும் பிரித்தானியாவைப் பின்பற்றி வாக்கெடுப்பு நடத்தவேண்டும் என்று கோரியுள்ளார்.

பிரித்தானியாவுக்கு பிரெக்சிட்டைப் போல, ஜேர்மனிக்கு ஒரு டெக்சிட் வாக்கெடுப்பு வேண்டும் என அவர் அழைப்புவிடுத்துள்ளார். (ஜேர்மன் மொழியில் ஜேர்மனி Deutschland என அழைக்கப்படுகிறது, ஆகவேதான் டெக்சிட்).

பதறும் ஆளும் கட்சி
ஆனால், அப்படி ஜேர்மனி ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறினால், ஜேர்மன் பொருளாதாரமே அழிந்துபோய்விடும் என பதறுகிறார் ஜேர்மன் நிதி அமைச்சரான கிறிஸ்டியன் லிண்ட்னர் (Christian Lindner).

ஜேர்மன் பொருளாதாரம் ஏற்றுமதியை பெருமளவில் நம்பியிருக்கும் நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒற்றைச் சந்தையை விட்டு ஜேர்மனி வெளியேறினால், ஜேர்மன் பொருளாதாரமே அழிந்துபோய்விடும் என்கிறார் அவர்.

ஜேர்மனியின் பொருளாதார நிலைமை தற்போது எப்படி உள்ளது?
உண்மையில், The Group of Seven (G7) என்னும் உலகின் ஏழு முன்னேறிய பொருளாதார நாடுகள் அமைப்பிலுள்ள நாடுகளில், கடந்த ஆண்டில் பொருளாதாரத்தில் சுருக்கத்தைச் சந்தித்த ஒரே நாடு ஜேர்மனிதான்.

இதற்கிடையில், ஜேர்மனிக்கு கடன் வழங்கும் ஜேர்மனியின் இரண்டு பெரிய வங்கிகளான Deutsche Bank மற்றும் Commerzbank என்னும் நிதி நிறுவனங்கள், 2024ஆம் ஆண்டில் ஜேர்மன் பொருளாதாரம் மேலும் சுருக்கத்தைச் சந்திக்கும் என கணித்துள்ளன.

இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில் ஜேர்மனி ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறுமானால், ஜேர்மன் நிதி அமைச்சரான கிறிஸ்டியன் கூறியதுபோலவே, ஜேர்மனி கடுமையான விளைவுகளை சந்திக்கலாம் என்பதை மறுப்பதற்கில்லை.

You might also like

Leave A Reply

Your email address will not be published.