;
Athirady Tamil News

சாந்தன் ஒரு வாரத்தில் இலங்கை செல்ல அனுமதி: இந்திய அரசு உறுதி

0

சாந்தன் தாயகம் திரும்புவதற்கு ஒரு வாரத்தில் அனுமதிக்கான ஆணை வழங்கப்படும் என்று இந்திய அரசு தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கு அனுப்ப கோரிக்கை
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி பின்னர் கடந்த 2022 நவம்பர் 11 -ம் திகதி உச்சநீதிமன்றத்தால் முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ், சாந்தன் ஆகியோர் விடுதலை செய்யப்பட்டனர்.

இவர்கள் அனைவரும் இலங்கை தமிழர்கள் என்பதால் திருச்சி சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டிருப்பதாக பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அவர்கள் தங்களை சொந்த நாடான இலங்கைக்கு அனுப்ப வேண்டும் என தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்திய அரசு உறுதி
இந்நிலையில், தன்னை இலங்கை செல்லுவதற்கு அனுமதிக்குமாறு இந்தியா, இலங்கை மற்றும் தமிழக அரசுகளுக்கு சாந்தன் கடிதம் எழுதியிருந்தார்.

அவர் அந்த கடிதத்தில், “கடந்த 32 ஆண்டுகளாக நான் எனது தாயை பார்க்கவில்லை. அவருடைய முதுமை காலத்தில் அவருடன் இருந்து வாழ விரும்புகிறேன். ஆகவே, அவரை கவனித்துக் கொள்ள இலங்கைக்கு அனுப்ப உத்தரவிட வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, “சாந்தன் இலங்கை திரும்ப ஒரு வாரத்தில் அனுமதிக்கான ஆணை வழங்கப்படும்” என்று இந்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும், “சாந்தன் தாயகம் திரும்புவதற்கான தற்காலிக பயண ஆவணத்தை இலங்கை தூதரகம் வழங்கியுள்ளது” என்று தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதன் பின் இந்த வழக்கானது பிப்ரவரி 29-ம் திகதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.