சட்டமா அதிபரின் அறிவுறுத்தல் இன்றி சட்டத்தரணிகளை கைது செய்ய முடியாது
சட்டமா அதிபரின் ஆலோசனையின்றி இனி சட்டத்தரணிகளை கைது செய்ய முடியாது என இலங்கை சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரட்ணம் யாழ் மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் பாலசுப்பிரமணியம் தவபாலன் தலைமையிலான சட்டத்தரணிகள் குழுவிடம் உறுதி அளித்துள்ளார்.
நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை கொழும்பில் உள்ள சட்டமா அதிபர் தலைமை காரியாலயத்தில் இடம்பெற்ற இலங்கை சட்டமா அதிபருக்கும் யாழ் மாவட்ட சட்டத்தரணிகள் சங்க குழுவினர் மற்றும் பொலிஸ் உயர் அதிகாரிகளுக்குமிடையிலான சந்திப்பின் முடிவில் குறித்த பணிப்புரை சட்டமா அதிபரால் பொலிஸாருக்கு விடுக்கப்பட்டது.
கடந்த மாதம் யாழ்ப்பாணம் வருகைதந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை யாழ் மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் பாலசுப்பிரமணியம் தவபாலன் வடமாகாண ஆளுநர் வாசல் தலத்தில் சந்தித்திருந்தார்.
இதன்போது யாழ் மாவட்டத்தின் பொலிசாரின் செயற்பாடுகள் தொடர்பில் ஜனாதிபதிக்கு எடுத்த கூறியதுடன் சட்டத்தரணிகள் கைது விடயத்தில் பொலிசார் உரிய நடைமுறைகளை பின்பற்றுவது இல்லை என கூறியிருந்தார்.
இந்நிலையில் கடந்த ஆறாம் திகதி யாழ்ப்பாணம் விஜயம் செய்த இலங்கை சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரட்ணத்தை யாழ் மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் உட்பட்ட குழுவினர் நேரில் சந்தித்து பொலிஸாரின் செயற்பாடுகள் தொடர்பில் தமது பக்க குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.
குறித்த சந்திப்பின் முடிவில் விசேடமான சந்திப்பு ஒன்றை கொழும்பில் ஏற்பாடு செய்து தருவதாக உறுதியளித்த சட்டமா அதிபர் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை குறித்த சந்திப்பை ஏற்பாடு செய்திருந்தார்.
குறித்த சந்திப்பில் யாழ் மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் உட்பட்ட குழுவினர் பொலிஸ் திணைக்கள உயர் அதிகாரிகள் முன் நிலையில் இனி வரும் காலங்களில் சட்டத்தரணிகளை கைது செய்யும்போது சட்டமா அதிபர் திணைக்களத்தின் அனுமதி பெறப்படாமல் கைது செய்ய முடியாது என தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.
குறித்த தீர்மானத்தை சம்பந்தப்பட்டவர்களுக்கு அனுப்பி வைக்குமாறு சட்டமா அதிபரால் பொலிஸ் உயர் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டது.