;
Athirady Tamil News

அம்பாறை மாவட்ட ஆசிரியர்களை சொந்த மாவட்டத்தினுள் இடமாற்ற தீர்மானம் -மேன்முறையீடு செய்யுமாறு வேண்டுகோள்

0

வெளிமாவட்டத்திற்கு இடமாற்றம் கிடைக்கப்பெற்ற அம்பாறை மாவட்ட ஆசிரியர்களை மாத்திரம் அவர்களின் மேன்முறையீட்டுன் பின்னர் சொந்த மாவட்டத்தினுள் இடமாற்ற தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் திருமதி சுஜாதா குலேந்திரகுமார் தெரிவித்தார்.

அம்பாறை மாவட்ட ஆசிரியர்களின் இடமாற்றம் தொடர்பில் இன்று பல தரப்பினரின் வேண்டுகோளுக்கமைய அம்பாறை மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும் தனது கருத்தில் தெரிவித்ததாவது

அண்மையில் அம்பாறை மாவட்ட கல்வி வலயங்களில் கற்பிக்கின்ற ஆசிரியர்களின் இடமாற்றம் சம்பந்தமாக இன்று நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் பல தரப்பினரும் வேண்டுகோள்களை முன்வைத்தனர்.இதற்கமைய மாவட்டத்தில் ஆசிரியர் வெற்றிடங்கள் அதிகம் காணப்படும் நிலையில் மாவட்டத்திற்கு வெளியே ஆசிரியர்கள் இடமாற்றப்படுவதை இடை நிறுத்தி மாவட்டத்திற்குள் காணப்படும் வெற்றிடங்களை நிரப்புவது என்று ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.அத்துடன் ஆசிரிய இடமாற்றத்தில் உள்ள முரண்பாடுகளை கண்டறிந்து குறித்த விடயத்தை சீர் செய்வதற்காக மேன் முறையீடு செய்வதற்கான கால எல்லையை நீடிக்கப்பட்டுள்ளது.அதாவது இன்று நிறைவடைந்த முடிவுத்திகதி நீடிக்கப்பட்டுள்ளதுடன் எதிர்வரும் வெள்ளிக்கிழமை(16) வரை மேன் முறையீடு செய்ய முடியும்.

அத்துடன் ஆளுநர் செந்தில் தொண்டமானின் பணிப்புரைக்கமைய மாணவர்களின் கல்விக்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம் எதிர்வரும் காலங்களில் இவ்விடயம் மேன்முறையீட்டின் அடிப்படையில் ஆராயப்பட்டு அம்பாறை மாவட்ட ஆசிரியர்கள் மாத்திரம் சொந்த மாவட்டத்தில் உள்ள வெற்றிடங்களுக்கு இடமாற்றம் வழங்கப்படும் என எமது செய்தியாளர் பாறுக் ஷிஹானிடம் அவர் மேலும் தெரிவித்தார்.

மேலும் இதுவரை அம்பாறை மாவட்டத்தில் இருந்து கடந்த காலங்களில் வெளிமாவட்டத்தினுள் ஆசிரியர்களாக கடமையாற்றி 5 முதல் 8 வரை வருடங்களை நிறைவு செய்த ஆசிரியர்கள் தமது சொந்த மாவட்டமான அம்பாறை மாவட்டத்தினுள் மீண்டும் இடமாற்றம் பெற்று வருவது கேள்விக்குறியாகியுள்ளதுடன் ஆசிரியர் இடமாற்றத்தில் சமநிலை தன்மை குறித்த கேள்வியும் எழுந்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.