பாலஸ்தீன மக்களை நாடு கடத்துவதற்கு தடை: அடுத்த 18 மாதங்களுக்கு பாதுகாப்பு
அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்படும் நிலையில் இருந்த பாலஸ்தீன மக்களுக்கு நிம்மதியளிக்கும் வகையில், தடை உத்தரவுக்கு அனுமதி அளித்துள்ளார் ஜனாதிபதி ஜோ பைடன்.
மோசமடைந்துள்ள மனிதாபிமான நிலைமை
அடுத்த 18 மாதங்களுக்கு இந்த தடை உத்தரவு அமுலில் இருக்கும் என்றே தெரிவிக்கப்பட்டுள்ளது. காஸா பகுதியில் மோசமடைந்துள்ள மனிதாபிமான நிலைமைகளை கருத்தில் கொண்டு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதனால் 6,000 பாலஸ்தீன மக்கள் வெளியேற்றப்படுவதில் இருந்து தடுக்கப்பட்டுள்ளனர். வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் அறிக்கை ஒன்றில் தெரிவிக்கையில்,
ஜனாதிபதி ஜோ பைடனின் இந்த முடிவு பாலஸ்தீன மக்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்யும், அத்துடன் தன்னிச்சையாக பாலஸ்தீன பகுதிகளுக்குத் திரும்பும் எவரும் தங்கள் பாதுகாப்பை இழக்க நேரிடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறைந்தது 28,500 பாலஸ்தீனியர்கள்
நான்கு மாதங்களுக்கும் மேலாக நீடிக்கும் போருக்குப் பிறகு, காஸாவில் உள்ள பாலஸ்தீனியர்களைப் பாதுகாக்க பைடன் நிர்வாகம் உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்ற அழுத்தத்தை அவர் எதிர்கொண்டு வருகிறார்.
மட்டுமின்றி, நிரந்தர போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்காததற்காக அரபு-அமெரிக்க மற்றும் முஸ்லீம் தலைவர்களிடமிருந்தும் அவர் விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளார்.
இதனிடையே, அக்டோபர் 7 முதல் காஸா மீதான இஸ்ரேலிய தாக்குதல்களில் குறைந்தது 28,500 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாக காஸா சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.