இலங்கையில் காதலர் தினத்தில் கோடிக்கணக்கான ரூபாவிற்கு ரோஜாப்பூ விற்பனை
இலங்கையில் காதலர் தினத்தில் சுமார் இரண்டு மில்லியன் ரோஜா பூக்கள் விற்பனை செய்யப்பட்டதாக விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
கடந்த 2023 ஆம் ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் போது இந்த ஆண்டு ரோஜா பூ விற்பனை நூற்றுக்கு நூறு வீதம் அதிகரித்துள்ளதாக விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
நாட்டின் மலர் விற்பனை நிலையங்களில் சிகப்பு ரோஜா உள்ளிட்ட பல்வேறு ரோஜா மலர்கள் கடந்த 13ஆம் திகதி மாலையிலிருந்து விற்பனை செய்யப்பட்டதாகவும் ரோஜா பூக்களுக்கு அதிக அளவு கிராக்கி காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
தனி ஒரு ரோஜா மலர் 300 ரூபாயிலிருந்து ஆயிரம் ரூபாய் வரையில் விற்பனை செய்யப்பட்டதாகவும், ரோஜா மலர் கொத்து 3000 முதல் 6000 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ரோஜாப்பூ விற்பனையில் 1200 கோடி ரூபா வருமானம்?
ரோஜாப்பூ விற்பனையில் சுமார் 1200 கோடி ரூபாய் வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ரோஜா பூக்கள், மலர் செண்டுகள், டெடி பியர் போன்றவற்றை கொள்வனவு செய்வதற்கு அதிகளவானவர் நாட்டம் காட்டியதாகவும் டெடி பியர் பொம்மைகள் 500 முதல் 1500 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்பட்டதாகவும் பிரதான தேசிய பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
புள்ளிவிபரத் தகவல்
எனினும் இந்த புள்ளிவிபரத் தகவல்களை அரசாங்கத் தரப்புக்கள் இதுவரையில் உறுதி செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் காதலர் தினத்திற்காக நட்சத்திர ஹோட்டல்கள் மற்றும் ஏனைய ஹோட்டல்களில் காதலர்கள் அறைகளையும் ஒதுக்கி இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு அறைகளை ஒதுக்கியவர்களில் வெளிநாட்டிலிருந்து இலங்கை வருகை தந்த சுற்றுலாப் பயணிகளும் உள்ளடங்குகின்றனர்.
பெருமளவு தொகைக்கு ஹோட்டல் அறைகள் ஒதுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. காதலர் தினத்தை முன்னிட்டு சுற்றுலா மற்றும் ஏனைய ஹோட்டல்களில் பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.