மீன்களின் உணவுகளை உண்ணும் மக்கள்! அவல நிலைக்குள்ளாகும் நைஜீரியா
பொருளாதார நெருக்கடியின் எதிரொலியால் நைஜீரியாவில் அரிசியின் விலை உட்பட அத்தியாவசிய பொருட்களின் விலையும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அந்நாட்டு மக்களின் பிரதான உணவு அரிசி காணப்படுகின்ற நிலையில், அரிசி விலை அதிகரிப்பால் தரம் குறைந்த அரிசியை பயன்படுத்தும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
அரிசி ஆலைகளில் முன்னர் ஒதுக்கப்பட்டு வந்த அஃபாஃபாடா (afafata) எனும் தடிமனான, சமைக்க கடினமான அரிசி வகையை பயன்படுத்த அந்நாட்டு மக்கள் பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர்.
குறைந்த விலைக்கு அரிசி
சில வருடங்களுக்கு முன், அஃபாஃபாடா அரிசியை, மீன்களுக்கு உணவிட பயன்படுத்துபவர்களிடம் குறைந்த விலைக்கு அரிசி ஆலையின் உரிமையாளர்கள் விற்று வந்தனர், சில சமயங்களில் அந்த அரிசியினை விற்காமல் தூக்கி வீசியும் உள்ளனர், ஆனால், இந்த நிலை தற்போது அங்கு மாறி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
அந்நாட்டின் ஏழை, எளிய மக்கள் இந்த அரிசியினை தற்போது அதிகளவில் பயன்படுத்த தொடங்கியிருப்பதால், மீன் பண்ணை வைத்திருந்தவர்களுக்கு இப்போது அஃபாஃபாடா கிடைப்பதும் அரிதாகி வருகிறது.
பொருளாதார நெருக்கடி
உலகளாவிய பொருளாதார நெருக்கடி காரணமாக, எரிபொருளுக்கான மானியத்தை அந்நாட்டு அதிபர் போலா டினுபு (Bola Tinubu) ரத்து செய்தமையால், “நைரா” (Naira) எனும் அந்நாட்டு நாணயம் மீதான பண மதிப்பு குறைவடைந்திருப்பதாலும் நைஜீரியாவில் உணவுப் பொருட்களின் விலை உயர்ந்து கொண்டே செல்கிறது.
இந்நிலையில், அந்நாட்டின் பல பகுதிகளிலும், விலை உயர்வுக்கு எதிராக மக்கள் போராட்டத்தை நடத்தி வரும் அதேவேளை, கடந்த 2 மாதங்களில் நைஜீரியாவில் விலைவாசி 2 மடங்காக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.