குடும்ப விசிட் விசா : குவைத்தின் புதிய அறிவிப்பு!
குவைத் நாட்டில் பணிபுரிபவர்கள் தங்கள் குடும்பங்களை, குடும்ப விசாவில் அழைத்து வர விரும்பினால் இரண்டு விமான நிறுவனங்களில் மட்டுமே பயணிக்க வேண்டும் என அந்த நாட்டு அரசு தெரிவித்து உள்ளது.
வளைகுடா நாடுகளில் தங்கி பணிபுரியும் பலர் தங்கள் குடும்பங்களையும் அங்கேயே அழைத்து ஒன்றாக வாழ்ந்து வருகிறார்கள்.
இதற்காகவே குடும்ப விசாக்களை அந்தந்த நாடுகள் வழங்கி வருகின்றன.
குடும்ப விசா
இந்த நிலையில், இந்தியர்கள் அதிகளவில் பணிபுரியும் குவைத் நாட்டில் குடும்ப விசாக்களில் வருபவர்கள் காலாவதியான பிறகு அந்த நாட்டில் சட்டவிரோதமாக தங்குவது அதிகரித்தது.
இந்த காரணத்தால் கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் குடும்ப விசா வழங்குவதை அந்த நாட்டு அரசாங்கம் தற்காலிகமாக நிறுத்தியது.
புதிய விதிமுறைகள்
இந்த பின்னணியில், பல்வேறு புதிய விதிமுறைகளுடன் இந்த மாதம் முதல் மீண்டும் குடும்ப விசாக்களுக்கான அனுமதியை வழங்கவுள்ளதாக குவைத் அரசு அறிவித்துள்ளது.
புதிய விதிமுறைகளின் படி, மனைவி மற்றும் குழந்தைகளுக்கு விசா ஸ்பான்சர் செய்யும் விண்ணப்பதார்கள் 400 குவைத் தினாரையும், மற்ற உறவினர்களுக்கு 800 குவைத் தினாரை குறைந்தபட்ச மாத ஊதியமாக பெற வேண்டும்.
இந்த குடும்ப விசா வைத்திருப்பவர்கள் அதிகபட்சமாக ஒரு மாத காலம் குவைத்தில் தங்க முடியும்.
மேலும், குடியுரிமை விசாவாக இதை மாற்ற மாட்டோம் என்று எழுத்துப்பூர்வ உறுதிமொழி பெற்ற பிறகே குடும்ப விசிட் விசாக்களை அந்த நாட்டு அரசு வழங்கவுள்ளது.
விமான நிறுவனங்கள்
குடும்ப விசாக்கள் மூலமாக வருவது தொடர்பாக குவைத் நாட்டில் டிஜிசிஏ எனப்படும் குவைத் விமான போக்குவரத்து தலைமை இயக்குநரகம் ஒரு உத்தரவை பிறப்பித்து உள்ளது.
இதன்படி, குடும்ப விசிட் விசாவில் குவைத் வருபவர்கள் அல் ஜசீரா ஏர்வேஸ் மற்றும் குவைத் ஏர்வேஸ் ஆகிய இரண்டு விமான நிறுவனங்களின் விமானங்களில் மட்டுமே அனுமதி தரப்பட்டு உள்ளதால் அதில் மட்டுமே வர முடியும் என அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த விமான நிறுவனங்கள் தவிர்த்து ஏனைய விமான நிறுவனங்களின் விமானங்கள் மூலம் குடும்ப விசிட் விசாவில் வருபவர்கள் தங்கள் சொந்த நாட்டிற்கே மீண்டும் திருப்பி அனுப்பப்படுவார்கள் என எச்சரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.