தேர்தல் பத்திரங்கள் என்றால் என்ன? அவற்றை தடை செய்ய காரணம் என்ன?
அரசியல் கட்சிகள் தனிநபர்கள் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களிடம் இருந்து நன்கொடை பெறுவதற்காகவே உருவாக்கப்பட்டது தேர்தல் பத்திரங்கள் திட்டம். கடந்த 2017-18 ஆம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில் இந்த திட்டத்தை அறிவித்த மத்திய பாஜக அரசு, 2018, ஜனவரி மாதத்திலேயே இந்த திட்டத்தை அமலுக்கும் கொண்டு வந்தது.
இந்த தேர்தல் பத்திரங்களை ரூ.1000, ரூ.10,000, ஒரு லட்சம், ரூ.10 லட்சம் மற்றும் ஒரு கோடி ரூபாய் மதிப்புகளில் வெளியிடுகிறது எஸ்.பி.ஐ. வங்கி. நாடு முழுவதும் 29 கிளைகளில் மட்டுமே, அதுவும் ஜனவரி, ஏப்ரல். ஜூலை மற்றும் அக்டோபர் மாதங்களில் 10 நாட்களுக்கு மட்டுமே விற்கப்படும்.
பொதுத்தேர்தல் காலங்களில் மட்டும் கூடுதலாக 30 நாட்களுக்கு விற்கப்படும் நிலையில், இதை வாங்குபவர்களின் பெயர், முகவரி, நிதி யாரிடம் இருந்து பெறப்பட்டது என்ற விவரங்கள் எதுவும் மற்றவர்களுக்கு தெரியாது. இதனால், தனிநபரோ, கார்ப்பரேட் அல்லது மற்ற நிறுவனங்களோ இந்த பத்திரங்களை வாங்கி, தங்களுக்கு விருப்பமான கட்சிகளுக்கு தேர்தல் நிதியை கொடுக்கலாம்.
சுருக்கமாக சொல்லப்போனால் குறிப்பிட்ட நிறுவனம் அல்லது தனிநபருக்கு பணத்தை நேரடியாக கொடுப்பதற்கு பதிலாக, வங்கியில் பணத்தை செலுத்தி டிடி எடுத்துக் கொடுப்பதைப் போல, இந்த தேர்தல் பத்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. எனவே, டிடி போன்ற இந்த தேர்தல் பத்திரங்களை பெற்ற அரசியல் கட்சிகள் 15 நாட்களுக்குள் எவ்வித கட்டுப்பாடும் இல்லாமல், வங்கியில் செலுத்தி பணமாக மாற்றிக் கொள்ளலாம்.
தேர்தல் பத்திரத்தை பெற்ற கட்சி 15 நாட்களுக்குள் பணமாக மாற்றிக் கொள்ளாவிட்டால், அதில் குறிப்பிட்ட தொகை முழுவதும் பிரதமரின் நிவாரண நிதியில் டெபாசிட் செய்யப்படும். தேர்தல் பத்திரத்தை இந்திய குடிமகனாக இருக்கும் யார் வேண்டுமானாலும் வாங்கி, தனக்கு விருப்பமான கட்சிக்கு தேர்தல் நிதியை கொடுக்கலாம்.
ஆனால், 1951, மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் 29A, பிரிவின் கீழ் பதிவு செய்யப்பட்ட கட்சிகள், மக்களவை மற்றும் சட்டமன்ற தேர்தல்களில் 1 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளை பெற்ற கட்சிகள் மட்டுமே இந்த தேர்தல் பத்திரங்களை நன்கொடையாக பெற முடியும். அந்த வகையில், கடந்த 5 ஆண்டுகளில் பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட தேசிய கட்சிகளும், திமுக, தெலங்கானா ராஷ்டிரிய சமிதி உள்ளிட்ட தென்னிந்திய கட்சிகளும் பல கோடி ரூபாய் வரை நன்கொடையாக பெற்றுள்ளன.
நாட்டிலேயே அதிகபட்சமாக, பாஜக ரூ.5,271 கோடியை இந்த தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடையாக பெற்றுள்ளது. அதற்கு அடுத்ததாக, காங்கிரஸ் ரூ.952 கோடியும், திரிணமுல் காங்கிரஸ் ரூ.767 கோடியும் நன்கொடையாக பெற்றுள்ளன. இதேபோல், ஒடிசாவில் ஆளுங்கட்சியாக உள்ள பிஜு ஜனதா தளம் ரூ.622 கோடியும், தென்னிந்தியாவை பொறுத்தவரை திமுக ரூ.431 கோடியும், அதிமுக ரூ.6 கோடியும், தெலங்கானா ராஷ்டிரிய சமிதி ரூ.383 கோடியும் நன்கொடையாக வாங்கியுள்ளன.
இந்த நிலையில், கார்ப்பரேட் நிறுவனங்களால் வாரி வழங்கப்படும் நன்கொடையால் மக்களுக்கு எவ்வித நன்மையும் இல்லை என குற்றஞ்சாட்டியுள்ளன எதிர்க்கட்சிகள். குறிப்பாக, கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்களது அடையாளத்தை வெளிப்படுத்தாமல், அரசியல் கட்சிகளுக்கு பணம் கொடுப்பதற்காவே உருவாக்கப்பட்டது இந்த தேர்தல் பத்திரங்கள் திட்டம் என்ற குற்றச்சாட்டும் உண்டு. மேலும், நன்கொடையாளரின் பெயர்கள் ரகசியமாக வைக்கப்படுவதால், அது கறுப்பு பணத்தையே ஊக்குவிப்பதாக எழுந்துள்ளது குற்றச்சாட்டு.
அத்துடன், அரசிடம் இருந்து பெற்ற சலுகைகளுக்கு பதிலாக, ஆளும் கட்சிக்கு மறைமுகமாக லஞ்சம் கொடுப்பதற்கே இந்த தேர்தல் பத்திரங்கள் திட்டம் உதவுவதாகவும் ஒரு கருத்து உண்டு. இதுபோன்ற காரணங்களே சமூக ஆர்வலர்களும், பல்வேறு கட்சிகளும் தேர்தல் பத்திரங்களை எதிர்க்க முக்கிய காரணம்.