செந்தில் பாலாஜி கோரிக்கை ஏற்க உயர்நீதிமன்றம் மறுப்பு!
சென்னை உயர்நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மறு ஆய்வு மனுவை அவசர வழக்காக விசாரிக்க நீதிபதிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.
தமிழக மின்சார துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கடந்தாண்டு கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
அவரின் ஜாமீன் மனுக்கள் தொடர்ந்து உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்தார்.
இதற்கிடையே, போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி செய்த புகாரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையின் விசாரணை முடியும் வரை, சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையின் விசாரணையை தள்ளி வைக்க கோரி சென்னை முதன்மை நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, செந்தில் பாலாஜியின் மனுவை தள்ளுபடி செய்தார்.
இந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், சுந்தர் மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு மறு ஆய்வு மனுவை செந்தில் பாலாஜி தாக்கல் செய்தார்.
அப்போது அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று செந்தில் பாலாஜி தரப்பில் வைக்கப்பட்ட கோரிக்கை நிராகரிக்கப்பட்டு, வழக்கில் விசாரணை பிப். 21-க்கு ஒத்திவைக்கப்பட்டது.