பிரதேச செயலகங்களால் கிராமங்கள் தோறும் கூட்டங்கள் நடத்தப்பட்டு மக்களின் நேரடி தெரிவுகளாகவே முன்மொழிவுகள் திரட்டப்பட்டுள்ளன – அமைச்சர்’ டக்ளஸ் தெரிவிப்பு!
சுற்றறிக்கையில் கூறப்பட்டதற்கிணங்க யாழ் மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு பிரதேச செயலகங்கள் ரீதியாக கிராமங்கள் தோறும் கூட்டங்கள் நடத்தப்பட்டு மக்களின் விருப்புக்கேற்ப அபிவிருத்தி திட்டங்கள் முன்மொழியப்பட்டு தெரிவுகள் திரட்டப்பட்டுள்ளதாக அமைச்சர்’ டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
மேலும் கடந்த மூன்று வருடங்களாக பன்முகப்படுத்தப்பட்ட நிதி மாவட்டங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படடாத நிலை இருந்தபோதும் இம்முறை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க யாழ் மாவட்டத்திற்கென 322 மில்லியன் ரூபா நிதியை ஒதுக்கியுள்ளார்.
ஆனாலும் இந்த நிதி மிக சொற்பமானதாகவே உள்ளது. அதாவது சிறு விடயங்களை மேற்கொள்வதற்கான நிதியாகவே உள்ளது. அதற்கிணங்கவே இம்முறை பிரதேச செயலகங்களால் கிராமங்கள் தோறும் கூட்டங்கள் நடத்தப்பட்டு அப்பிரதேச மக்களின் நேரடி தெரிவகளாக திட்டங்களும் முன்மொழிவுகளும் திரட்டப்பட்டுள்ளன என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
தமது ஒப்புதல் இன்றி 2024 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியில் மேற்கொள்ளப்படவுள்ள திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுட்டிக்காட்டியதற்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் ஜனாதிபதியுடன் நேரடியாக தொடர்புகளை பேணி வருபவர்கள் என்று சுட்டிக்காட்டிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஜனாதிபதிக்கு இவ்விடயம் தொடர்பில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எழுத்திலும் அனுப்பியுள்ளார்கள். அதற்கு ஜனாதிபதியும் இணங்கியுள்ளதாக தெரியவருகின்றது.
அதனடிப்படையில்தான் நான் கூறினேன் ஜனாதிபதிக்கு உங்களது தெரிவுகளை அனுப்புங்கள் அல்லது எம்மிடம் தாருங்கள் என்று. அத்துடன் குறித்த திட்டத்தில் தமது திட்டங்களும் உள்வாங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்வைத்துள்ளனர்.
அதனடிப்படையில் ஒரு வாரத்திற்குள் அவர்களது திட்டங்களையும் உள்வாங்கி உரிய தரப்பினர்களுக்கு வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
இதனிடையே யாழ்ப்பாணம் மாவட்டத்திற்கான குடிநீர் விநியோகம் தொடர்பிலும் விரிவாக ஆராயப்பட்டது. இவ்விடயம் தொடர்பில் ஆராய்வதற்கென இன்று அமைச்சர் ஜீவன் தொண்டமானும் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்திற்கு வருகைதந்திருந்தார்.
ஆனாலும் குடிநீர் பிரச்சினை, விவசாயத்துக்கான நீர் தொடர்பில் இன்றும் தீர்க்கமான தீர்வு எட்டப்படவில்லை. இதையடுத்து குறித்த விடயம் தொடர்பில் கூட்டத்தில் கலந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் ,கமக்கார அமைப்புகள் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் அடங்கிய குழுவினர் கொழும்பில் ஒரு கூட்டத்தில் கலந்து கொண்டு உரிய முடிவினை எடுப்பதாகவும் தீர்மானிக்கப்பட்டது.
இதேவேளை இந்திய இழுவை மடி படகுகளை நிறுத்துவது தொடர்பில் இன்று ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
அத்துடன் இவ்விடயமே எமது கடற்றொழிலாளர்களுக்கு பாரிய பிரச்சினையாக இருப்பதாக சுட்டிக்காட்டிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா எமது பிரதேச வளங்களை அழிக்கின்ற கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை அழிக்கின்ற இந்த பிரச்சினைக்கு தீர்வுகாண தாம் பலதரப்பட்ட முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.
அதன் ஒரு பகுதியாக கடற்பகுதியில் கண்காணிப்புப் பணிகளை தொடர்ந்து முன்னெடுக்குமாறும் கடற்படையினருக்கு அறிவுறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
குறித்த கூட்டத்தில் நீர் வழங்கல் மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான், நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், சி.சிறிதரன், அங்கஜன் இராமநாதன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செ.கஜேந்திரன், யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன், வடக்கு மாகாண சபை அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம், திணைக்களங்களின் தலைவர்கள், பிரதேச செயலாளர்கள், பொலிஸார், முப்படையினர், சமூகமட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.