நெடுந்தீவில் கைதான 3 தமிழக கடற்தொழிலாளர்களுக்கு 06 மாத சிறை – 20 பேருக்கு 5 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறை
யாழ்ப்பாணம் – நெடுந்தீவு கடற்பரப்பில் கைதான 23 கடற்தொழிலாளர்களில் மூவருக்கு ஆறு மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஏனைய 20 பேருக்கும் மூன்று குற்றச்சாட்டுக்களுக்கும் 18 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டு , அதனை 5 வருட காலங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நெடுந்தீவு கடற்பரப்பில் கடந்த 3 ஆம் திகதி அத்துமீறி நுழைந்து கடற்தொழில் ஈடுபட்ட 23 கடற்தொழிலாளர்களை கைது செய்த கடற்படையினர் அவர்களின் இரு படகுகளையும் கைப்பற்றி இருந்தனர்.
கைது செய்யப்பட்ட கடற்தொழிலாளர்கள் மறுநாள் 4ஆம் திகதி ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டதை அடுத்து அவர்களை இன்றைய தினம் வெள்ளிக்கிழமை வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டது.
அந்நிலையில் இன்றைய தினம் குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, படகோட்டிகள் இருவரும் GPS கருவிகள் மூலம் இலங்கை கடற்பரப்பை அறிந்து கொண்டே , அத்துமீறி நுழைந்தார்கள் என விசாரணைகளில் கண்டறியப்பட்டதில் அவர்களுக்கு 06 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
மற்றுமொரு கடற்தொழிலாளி ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை அனுபவித்து வரும் நிலையில் மீளவும் இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்தமையால் , அவருக்கு எதிரான குற்றச்சாட்டுக்களுக்கு தலா 06 மாத கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் அதனை ஏக காலத்தில் அனுபவிக்க மன்று அனுமதித்ததை அடுத்து அவருக்கு 06 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஏனைய 20 கடற்தொழிலாளர்களுக்கு எதிரான மூன்று குற்றச்சாட்டுக்களுக்கு தலா 06 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு , அதனை 05 வருட காலங்களுக்கு மன்று ஒத்திவைத்துள்ளது.