”எந்த தேர்தல் முதலில் நடக்கும் என்பது கேள்விக்குறியே” றிஷாட் பதியுதீன்!
தேர்தலுக்கு தயாராக இருக்கின்றோம். எந்த தேர்தல் முதலில் நடக்கும் என்பது கேள்விக்குறியே என நாடாளுமன்ற உறுப்பினர் றிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
இன்றையதினம்(16) முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் இடம்பெற்றதன் பின்னர் தேர்தல் தொடர்பாக தங்களுடைய நிலைப்பாடு என்ன என வினவிய போதே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், “எமது கட்சியை பொறுத்தவரை எந்த தேர்தல் நடந்தாலும் தயாராக இருக்கின்றோம். ஆனால் எந்த தேர்தல் நடக்கும் என யாராலும் கூற முடியாமல் இருக்கின்றது.
எந்த தேர்தல் முதலில் நடக்கும்
நாட்டினுடைய அரசியல் அமைப்பு சட்டத்தின்படியும் தேர்தல் முறைப்படியும் அதிபர் தேர்தலே நடாத்த வேண்டும்.
அதிபர் தேர்தலுக்கு முன்னர் அதிபர்விரும்பினால் நாடாளுமன்றத்தை கலைத்து நாடாளுமன்ற தேர்தலை நடாத்த முடியும்.
எதை முன்னர் செய்வார் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் தேசிய கட்சியோடு சேர்ந்து பயணிப்பதா ? அல்லது பொதுத்தேர்தலாக இருந்தால் எவ்வாறு பயணிப்பது? ,அதிபர் தேர்தலாக இருந்தால் எவ்வாறு பயணிப்பது என்பதனை எமது கட்சி கூடி முடிவெடுக்கும்” என மேலும் தெரிவித்தார்.