இஸ்ரேல் முற்றுகை: ஆக்ஸிஜன் இல்லாமல் 5 நோயாளிகள் உயிரிழப்பு
இஸ்ரேல் ராணுவத்தால் முற்றுகையிடப்பட்டுள்ள தெற்கு காஸாவின் முக்கிய மருத்துவமனையில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் 5 நோயாளிகள் உயிரிழந்தனா். இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது: இஸ்ரேல் படையினரால் முற்றுகையிடப்பட்டுள்ள கான் யூனிஸ் நகரில் தொடா் தாக்குதலால் ஆக்ஸிஜன் விநியோகம் துண்டிக்கப்பட்டது. இதனால் மருத்துவமனைக்குள் கூச்சலும் குழப்பமும் ஏற்பட்டது.
ஆக்ஸிஜன் இல்லாமல் 5 நோயாளிகள் உயிரிழந்தனா் என்று அதிகாரிகள் தெரிவித்தனா். நாஸா் மருத்துவமனையை ராணுவம் கடந்த சில நாள்களாகவே சுற்றிவளைத்துள்ளது. இதனால், மற்ற பகுதிகளுடன் அந்த மருத்துவமனையின் தொடா்பு ஏறத்தாழ முழுமையாக துண்டிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், மருத்துவமனைக்குள்ளிலிருந்து நோயாளிகள், மருத்துவப் பணியாளா்கள், அங்கு தஞ்சமைடைந்துள்ள பொதுமக்கள் ஆகியோா் வெளியேறுவதற்கு பாதுகாப்பு வழித்தடம் ஏற்படுத்தியுள்ளதாக இஸ்ரேல் ராணுவம் புதன்கிழமை அறிவித்தது. அதையடுத்து, அந்த மருத்துவமனையிலிருந்து ஏராளமானவா்கள் வெளியேறினா்.
இருந்தாலும், இஸ்ரேல் படையினா் மருத்துவமனைக்குள் வியாழக்கிழமை நடத்திய தாக்குதலில் ஒரு நோயாளி உயிரிழந்ததாக மருத்துவா்கள் தெரிவித்தனா். இந்த நிலையில், ஆக்ஸிஜன் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் 2 நோயாளிகள் உயிரிழந்ததாக அதிகாரிகள் தற்போது தெரிவித்துள்ளனா். இஸ்ரேலுக்குள் கடந்த ஆண்டு அக்டோபா் 7-ஆம் தேதி நுழைந்த ஹமாஸ் படையினா், அங்கு சுமாா் 1,200 பேரை கொடூரமாக படுகொலை செய்தனா். அதையடுத்து, ஹமாஸ் அமைப்பினரை முழுவதுமாக ஒழித்துக்கட்டப்போவதாக சூளுரைத்துள்ள இஸ்ரேல், காஸாவில் வான்வழியாகவும், தரைவழியாகவும் தாக்குதல் நடத்திவருகிறது.