இலங்கை போக்குவரத்துசபைக்கு சொந்தமான 700 பேருந்துகளை ஏலமிட தீர்மானம்
இவ்வருடம் சேவையில் இருந்து நீக்கப்பட்ட எழுநூறு பேருந்துகளை ஏலம் விடுவதற்கு இலங்கை போக்குவரத்து சபை தீர்மானித்துள்ளது.
இந்த பேருந்துகள் அனைத்தும் பல வருடங்களாக சேவையில்லாமலிருந்ததாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் லலித் டி அல்விஸ் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் கொழும்பு பிராந்தியத்தில் மாத்திரம் இவ்வாறான 103 சேவையில் ஈடுபடாத பேருந்துகள் உள்ளதாகவும், அந்த பேருந்துகளின் பதிவை இரத்து செய்யுமாறு அவற்றின் இலக்கங்களுடன் கூடிய அறிக்கை மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
ஐயாயிரத்து முன்னூறு பேருந்துகள்
இதன்மூலம் டிப்போக்களில் உள்ள பேருந்துகளை இரும்புக்காக ஏலம் விட்டு அதில் கிடைக்கும் வருமானத்தில் புதிய பேருந்துகளை வாங்குவதற்கு பயன்படுத்த உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதன்படி தற்போது இலங்கை போக்குவரத்து சபையின் ஐயாயிரத்து முன்னூறு பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும், இந்த வருட இறுதிக்குள் பேருந்துகளின் எண்ணிக்கையை ஆறாயிரமாக அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.