கேஜரிவால் மார்ச் 16-ல் நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு!
தில்லி அரசின் கலால் கொள்கை ஊழல் குற்றச்சாட்டு வழக்கில் விசாரணைக்கு ஆஜராகக் கோரி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலுக்கு அமலாக்கத்துறை 5 முறை நோட்டீஸ் அனுப்பியும் கேஜரிவால் ஆஜராகவில்லை.
இதனிடையே, கேஜரிவால் ஆஜராக தில்லி நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மனுத் தாக்கல் செய்தது. தில்லி நீதிமன்றம் இன்று நேரில் ஆஜராகும்படி கேஜரிவாலுக்கு நோட்டீஸ் அனுப்பியது.
அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கு தொடர்பாக கேஜரிவால் தில்லி நீதிமன்றத்தில் இன்று நேரில் ஆஜராவார் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், வழக்கு விசாரணைக்காக ஆம் ஆத்மி தலைவர் கேஜரிவால் காணொளி காட்சி வாயிலாக ஆஜரானார்.
தில்லி சட்டப்பேரவையில் இன்று அரசின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு விவாதம், பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறுவதால், நீதிமன்றத்தில் ஆஜராக முடியவில்லை என கேஜரிவால் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
கேஜரிவால் சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் ரமேஷ் குப்தா, அடுத்த விசாரணை தேதியில் தில்லி முதல்வர் நேரில் ஆஜராவார் என்று நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
இதையடுத்து, வழக்கு விசாரணை மார்ச் 16-ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது. அன்றைய தினம் நேரில் ஆஜராக கேஜரிவாலுக்கு தில்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.