ஈமக்கிரியை கழிவுகளால் அபாய நிலையை அடையும் யாழ்ப்பாண கீரிமலை
யாழ்ப்பாணம் கீரிமலை புனித தீர்த்த கரையோரத்தில் ஈமக் கிரியைக் கழிவுகள் பாரியளவில் கொட்டிக்கிடப்பதனால் அக் கடற்கரைப்பகுதி மிக மோசமாக அசுத்தமடைந்துள்ளது.
குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,
வரலாற்றுச் சிறப்பு மிக்க கீரிமலை நகுலேஸ்வரர் ஆலய தீர்த்தக்கரை பிதிர்க்கடன் நிறைவேற்றும் கிரிகைகளுக்குப் பிரசித்தமான இடமாகும்.
ஈமக்கிரியைக் கழிவுகள்
இத் தீர்த்தக்கரையில் கிரியைகள் செய்வதற்கு என ஒரு சிறு கட்டடமும் காணப்படுகிறது. அத்துடன் மக்கள் இங்கு வந்து தமது அமரத்துவமடைந்த உறவினர்களின் ஈமக்கிரியைகளை நிறைவேற்றுவதற்கு கட்டணமும் அறவிடப்படுகிறது.
இந்நிலையில், பல காலமாக அக்கடற்கரையில் கொட்டப்படும் ஈமக்கிரியைக் கழிவுகள் அகற்றப்படாமல் அப்படியே தேங்கிக் கிடக்கவிடப்பட்டுள்ளது.
அதிலும் குறிப்பாக கிரியையின் போது உடைக்கப்படும் மண் பானைகளின் சிதறிய துண்டுகள் அதிகளவில் குறித்த கடற்கரையோரம் காணப்படுகின்றன.
அவற்றில் அல்கா படர்ந்துள்ளதுடன் அசுத்தமாகவும் காணப்படுகிறது. இதனால் இக்கடற்கரைப்பகுதி எதிர்காலத்தில் பயன்படுத்தப்பட முடியாத அபாய நிலையை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.