பரபரப்பாகும் தென்னிலங்கை அரசியல்! அம்பலமாகும் சந்திரிக்காவின் சதித்திட்டம்
இலங்கையில் தற்போது நடைமுறையில் உள்ள நிறைவேற்று அதிகார அதிபர் முறையை நீக்குவது தொடர்பில் பரவலாக பேசப்பட்டு வரும் நிலையில், குறித்த நடவடிக்கையின் பின்னணியில் முன்னாள் அதிபர் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
எனினும், நிறைவேற்று அதிகார அதிபர் முறையை நீக்கும் நடவடிக்கைக்கு தற்போது நாடாளுமன்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றுக் கொள்ள முடியாத காரணத்தால் குறித்த நடவடிக்கை வெற்றியளிக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிறைவேற்று அதிகார அதிபர் முறைமை
இலங்கையில் இந்த ஆண்டு அதிபர்த் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், நிறைவேற்று அதிகார அதிபர் முறைமையை நீக்குவதற்கு முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரியவுடன் இணைந்து முன்னாள் அதிபர் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றுமு் குடிசார் சமூகத்தினர் இது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டுமென இருவரும் கோரியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
அத்துடன், நிறைவேற்று அதிகார அதிபர் முறையை நீக்க தேவையான திருத்தங்களை அரசியலமைப்பில் மேற்கொள்வது தொடர்பிலும் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் பேச்சுக்களை முன்னெடுக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஜே.வி.பி ஆதரவு
இதன்படி, நாடாளுமன்றத்துக்கு அமைச்சரவைக்கும் நிறைவேற்று அதிபர் முறைமையின் அதிகாரங்களை வழங்குமாறும் கோரப்பட்டுள்ளது.
இந்த நிலையில், நிறைவேற்று அதிகார அதிபர் முறைமையை நீக்கும் நடவடிக்கைக்கு எதிர்க்கட்சி மற்றும் பொதுஜன பெரமுன ஆதரவளித்துள்ள நிலையில், அவசரமாக மேற்கொள்ளப்படவுள்ள குறித்த நடவடிக்கையை எதிர்ப்பதாக மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான தேசிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.