லொட்டரியில் ரூ 2,823 கோடி வென்ற நபர்… தொழில்நுட்ப பிழை என மறுக்கும் நிறுவனம்
அமெரிக்காவில் ஒருவர் லொட்டரியில் 340 மில்லியன் டொலர் தொகையை வென்றதாக கருதிய நிலையில், அது தொழில்நுட்ப பிழை என அந்த நிறுவனம் பதிலளித்துள்ளது.
340 மில்லியன் டொலர்
கடும் ஏமாற்றமடைந்த அந்த நபர் Powerball நிறுவனம் மீது வழக்கு தொடுக்க இருக்கிறார். அமெரிக்காவின் வாஷிங்டன் பகுதியை சேர்ந்தவர் ஜான் சீக்ஸ். கடந்த ஆண்டு ஜனவரி மாதம் Powerball ஜாக்பாட் லொட்டரி ஒன்றை வாங்கியுள்ளார்.
சம்பவத்தன்று இணைய பக்கத்தில் வெற்றி இலக்கங்கள் பதிவான நிலையில், தாம் 340 மில்லியன் டொலர் தொகையை (இந்திய மதிப்பில் ரூ 2,823 கோடி) வென்றதாகவே ஜான் சீக்ஸ் நம்பியுள்ளார்.
பொதுவாக லொட்டரி சீட்டு மீது பெரிதாக ஈர்ப்பு இல்லாத ஜான் சீக்ஸ் எப்போதாவது சீட்டு வாங்குவது வழக்கம். ஆனால் கடந்த ஆண்டு ஜனவரி 6ம் திகதி தமது குடும்பத்தினரின் பிறந்தநாள் மற்றும் தனிப்பட்ட விருப்ப இலக்கங்களுடன் லொட்டரி ஒன்றை வாங்கியுள்ளார்.
7ம் திகதி அறிவிக்கப்பட்ட முடிவில், ஜான் சீக்ஸ் வென்றுள்ளதாகவே இணைய பக்கத்தில் தகவல் வெளியானது. உடனே நண்பருக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு தகவலை தெரிவித்துள்ளார்.
நிறுவனம் மீது வழக்கு
நண்பரின் ஆலோசனையின் பேரில் வெற்றி இலக்கங்களை புகைப்படமாகவும் பதிவு செய்துள்ளார். ஆனால் அடுத்த நாள், இணைய பக்கத்தில் வெற்றி இலக்கங்கள் மாறியுள்ளதை அறிந்து ஜான் சீக்ஸ் அதிர்ச்சியில் உறைந்துள்ளார்.
தற்போது லொட்டரி நிறுவனம் மீது வழக்கு தொடர்ந்துள்ள ஜான் சீக்ஸ், தமது வெற்றி இலக்கங்கள் மூன்று நாட்கள் உத்தியோகப்பூர்வ இணைய பக்கத்தில் காணப்பட்டும், தொழில்நுட்ப கோளாறு என பரிசு தொகை மறுக்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.