யாழ். இந்தியத் தூதரகம் முற்றுகை
யாழ். இந்தியத் துணைத் தூதரகம் எதிர்வரும் 20 ஆம் திகதி முற்றுகையிடப்படும் என யாழ். மாவட்ட கடற்றொழிலாளர் அமைப்புக்கள் அறிவித்துள்ளன.
யாழ்ப்பாணத்தில் இன்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே கடற்றொழில் அமைப்புக்கள் இவ்வாறு அறிவித்துள்ளன.
இதேவேளை, எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கைது செய்யப்பட்ட இந்திய இழுவைப் படகின் ஓட்டுநருக்கு ஆறு மாத சிறைத் தண்டனை மற்றும் இரண்டாவது முறையாக கைது செய்யப்பட்ட மீனவருக்கு ஓராண்டு சிறைச் தண்டனை விதித்தமையைக் கண்டித்து இராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் மீனவர்கள் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தும் முகமாக இராமேஸ்வரம் மீன் பிடித்துத் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சுமார் 800 இற்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் இன்று (18) காலை கறுப்புக் கொடியேற்றி போராட்டம் நடத்தி வருகின்றனர்.
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கைது செய்யப்பட்ட மூன்று தமிழக மீனவர்களுக்கு சிறைத் தண்டனை விதித்து இலங்கை நீதிமன்றம் தீர்ப்பளித்ததைக் கண்டித்து நீதிமன்ற தீர்ப்பை உடனடியாக இரத்துச் செய்ய வலியுறுத்தியும் இராமேஸ்வரம் மீனவர்கள் கச்சதீவு திருவிழாவைப் புறக்கணிப்பதுடன் நேற்று (17) முதல் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக ஆலோசனைக் கூட்டத்தில் விசைப்படகு மீனவர்கள் முடிவு செய்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.