அதிபர் ராஜிநாமா சரியே: ஹங்கேரி பிரதமர் விக்டர் ஆர்பன்
ஹங்கேரி அதிபர் கட்டலின் நோவாக் ராஜிநாமா செய்தது சரியே என்று அந்நாட்டு பிரதமர் விக்டர் ஆர்பன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் நேற்று ஆற்றிய உரையில், ராஜிநாமா சரியானது. அது எங்களைப் பலப்படுத்துகிறது. அதிபர் மற்றும் நீதி அமைச்சருக்கு அனைவரின் சார்பாகவும் கனத்த இதயத்துடன் நன்றி கூறுகிறேன். இது ஹங்கேரிக்கு பெரும் இழப்பு. பெரும்பான்மையான ஹங்கேரியர்கள் அவரது பொது மன்னிப்பு முடிவை நிராகரித்தனர்.
நாட்டில் குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பு வலுப்படுத்தப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைக்கு உடந்தையாக இருந்தவர் என குற்றம்சாட்டப்பட்ட நபருக்கு ஹங்கேரி அதிபராக பதவிவகித்த கட்டலின் நோவாக் பொது மன்னிப்பு வழங்கியது நாட்டு மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.
இதனையடுத்து போராட்டங்கள் வெடித்த நிலையில் அவர் பதவி விலகும் அறிவிப்பை அண்மையில் வெளியிட்டார். 46 வயதான கட்டலின் நோவாக், 2022 முதல் அதிபராக பொறுப்பு வகித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.