கெஹலியவுக்கு விசேட மருத்துவ பரிசோதனை: நீதிமன்றம் உத்தரவு
இலங்கையின் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, 7 பேர் கொண்ட மருத்துவ குழுவினரால் பரிசோதனை செய்யப்படவேண்டும் என்று மாளிகாகந்த நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
கெஹலிய ரம்புக்வெல்ல, தாம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் நோய்களால் உண்மையில் பாதிக்கப்பட்டுள்ளாரா என்பதை கண்டறிவதற்காகவே குறித்த பரிசோதனையை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவ குழுவின் அறிக்கையை பெப்ரவரி 29ஆம் திகதிக்கு முன்னர் நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறும் நீதவான் லோச்சனா அபேவிக்ரம சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மருத்துவ பரிசோதனை
தற்போது, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் சமர்பித்த மருத்துவ அறிக்கைகளின் நம்பகத்தன்மை குறித்து கேள்வி எழுப்பி பிரதி மன்றாடியார் நாயகம் லக்மினி கிரிஹாகம முன்வைத்த சாட்சியங்களை பரிசீலித்த நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
சட்டமா அதிபர் திணைக்களத்தினால் முன்வைக்கப்பட்ட மருத்துவ அறிக்கைகளை ஏற்றுக்கொள்ள முடியாது என டி.எஸ்.ஜி.கிரிஹாகம தெரிவித்துள்ளதோடு அவை அசல் அறிக்கைகள் அல்ல என்றும் அவை பிரதிகள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அறிக்கைகள் 2011 முதல் 2017 வரையிலானவை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், முன்னாள் அமைச்சரின் பிணைக்கு ஆதரவாக மருத்துவ அறிக்கைகளை வழங்கிய மருத்துவர் கடந்த ஐந்து வருடங்களாக, சந்தேக நபரான ரம்புக்வெலவை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தவில்லை என்றும் பிரதி மன்றாடியார் நாயகம் தெரிவித்துள்ளார்.
மருத்துவ குழு
இந்நிலையில், சிறைச்சாலை மருத்துவமனை கூறும் நோய்களால் கெஹலிய உண்மையில் பாதிக்கப்பட்டுள்ளாரா என்பதை தீர்மானிக்க நீதவானால் நிறுவப்பட்ட மருத்துவ குழு முன்னாள் அமைச்சரை பரிசோதிக்கவுள்ளது.
அதுமட்டுமின்றி, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகமே, முன்னாள் அமைச்சரை பரிசோதிக்க நியமிக்கப்பட்டுள்ள மருத்துவ குழுவிற்கு தலைமை தாங்கவுள்ளார்.
இந்த மருத்துவ நிபுணர் குழு வழங்கும் அறிக்கையின் பின்னரே, ஒருவித உடல்நிலையால் அவதிப்பட்டு வருவதால், சிறைச்சாலை மருத்துவமனையில் சிகிச்சை பெற முடியுமா அல்லது வேறு மாற்றுவழி சிகிச்சை பெற வேண்டுமா என்பதை நீதிமன்றத்திற்கு தெரிவிக்குமாறு குழுவிடம் கோரப்பட்டுள்ளது.