இலங்கையின் பொருளாதார நெருக்கடி : தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்
இலங்கை மக்கள் தங்கள் நாளாந்த தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதில் கடும் நெருக்கடிகளை எதிர்நோக்குவதாக கொழும்பு மறைமாவட்ட பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்ஜித் சுட்டிக்காட்டியுள்ளார்.
கம்பஹா பகுதியில் இடம்பெற்ற விசேட ஆராதனையொன்றின் போதே, அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இதனால் நாட்டு மக்களுள் சுமார் 60 வீதமானோர், தங்கள் தங்க நகைகளை அடகு வைக்கவும் அவற்றை விற்பனை செய்யவும் றடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
வாழ்க்கை போராட்டம்
மக்கள் இன்று வாழ்வதற்கே பாரியதொரு போராட்டத்தை போராடுவதாக அவர் கூறியுள்ளார்.
நாளாந்த தேவைகளை பூர்த்தி செய்வதற்கான போராட்டம் காரணமாக, மக்களின் மனநிலையும் பாதிக்கப்பட்டுள்ளதாக கர்தினால் மெல்கம் ரஞ்ஜித் சுட்டிக்காட்டியுள்ளார்.
மாதாந்த சம்பளம்
மக்கள் தங்கள் தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்கான மாதாந்த சம்பளம் அவர்களுக்கு வழங்கப்படுவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினர், உரிய நடவடிக்கைகளை எடுக்க தவறியுள்ளதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.