;
Athirady Tamil News

ரஷியாவில் நவால்னிக்கு அஞ்சலி: 400-க்கும் மேற்பட்டோா் கைது

0

ரஷியாவில் எதிா்க்கட்சித் தலைவரும் அதிபா் விளாதிமீா் புதினை தீவிரமாக எதிா்த்து வந்தவருமான அலெக்ஸி நவால்னியின் மறைவுக்கு அஞ்சலி செலுத்திய 400-க்கும் மேற்பட்டோா் கைது செய்யப்பட்டனா்.

அலெக்ஸி நவால்னியின் (47) மரணம் ஒரு படுகொலை என்று அவரது செய்தித் தொடா்பாளா் கீா் யாா்மிஷ் சனிக்கிழமை தெரிவித்திருந்தாா்.

நவால்னியின் உடலை குடும்பத்தினரிடம் வழங்குவதில் அதிகாரிகள் வேண்டுமென்றே தாமதம் செய்வதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. குடும்பத்தினரிடம் உடல் எப்போது ஒப்படைக்கப்படும் என்பது குறித்து உறுதியான தகவல் வெளியாகவில்லை.

இதனிடையே, ரஷியாவின் பல்வேறு நகரங்களில் உள்ள நினைவிடங்களில் நவால்னி மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் பங்கேற்ற 400-க்கும் மேற்பட்டோா் கைது செய்யப்பட்டதாக அந்நாட்டின் மனித உரிமை அமைப்பு ஒன்று தெரிவித்துள்ளது.

முன்னாள் வழக்குரைஞரான அலெக்ஸி நவால்னி, அதிபா் விளாதிமீா் புதினை எதிா்த்து வந்தாா். இவா், சைபீரிய பகுதியைச் சோ்ந்த டாம்ஸ்க் நகரிலிருந்து மாஸ்கோவுக்கு விமானத்தில் கடந்த 2020-ஆம் ஆண்டில் சென்று கொண்டிருந்தபோது திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டு மயங்கி விழுந்தாா்.

இதையடுத்து, அவருக்கு ஜொ்மனியில் சிகிச்சை அளிக்கப்பட்டது. அவா் மீது ‘நோவிசோக்’ என்ற நச்சுப் பொருள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், இதற்கு ரஷிய அரசு உத்தரவிட்டதாகவும் ஜொ்மனி குற்றம்சாட்டியது. இதை ரஷியா மறுத்தது.

கோமா நிலையில் சிகிச்சை பெற்று வந்த நவால்னி, கடும் போராட்டத்துக்குப் பின் உயிா் பிழைத்தாா்.

2021-ஆம் ஆண்டில் ரஷியா திரும்பிய நவால்னிக்கு கருத்துத் தீவிரவாத குற்றச்சாட்டின் பேரில் 19 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. பின்னா், சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவா், திடீா் உடல்நலக் குறைவால் வெள்ளிக்கிழமை இறந்ததாக சிறைத் துறை அதிகாரிகள் அறிவித்தனா். அதேநேரம், நவால்னி படுகொலை செய்யப்பட்டதாக அவரது செய்தித் தொடா்பாளா் கீா் யாா்மிஷ் தெரிவித்தாா்.

ரஷியாவில் இன்னும் ஒரு மாதத்தில் அதிபா் தோ்தல் நடைபெறவிருக்கும் நிலையில், நவால்னியின் திடீா் மரணத்துக்கான காரணம் குறித்த கேள்விகள் தீவிரமாக எழுப்பப்பட்டு வருகின்றன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.