யார் அழுத்தம் கொடுத்தாலும் ராஃபா தாக்குதல் நடத்தப்படும் : இஸ்ரேல் பிரதமர் சூளுரை
காசாவின் ராஃபா தாக்குதலை முன்னெடுக்கும் திட்டத்தை கைவிட உலக தலைவர்கள் பலர் இஸ்ரேலுக்கு அழுத்தம் கொடுத்தாலும், ராஃபாவில் தரைவழி போர் நடவடிக்கைகளை மேற்கொள்ள இஸ்ரேல் தெளிவாக திட்டமிட்டு வருவதாக இஸ்ரேல் பிரதமர் தெரிவித்துள்ளார்.
ஜெருசலேமில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின்போது பேசிய இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மேலும் தெரிவிக்கையில்,
ஹமாஸுக்கு எதிரான போரில் தோற்பதற்கு சமமானது
ராஃபா தாக்குதல் திட்டத்தை கைவிடுவது, ஹமாஸுக்கு எதிரான போரில் தோற்பதற்கு சமமானது என்றும், எவ்வித அழுத்தத்திற்கும் அடிபணிய மாட்டோம் எனவும், முழு வெற்றி கிட்டும் வரை இஸ்ரேல் சண்டையிடும் என அவர் சூளுரைத்துள்ளார்.
அமெரிக்காவுடன் இணைந்து இஸ்ரேல் செயல்பட்டு வருவதாகவும், அமெரிக்காவின் ஆதரவுக்கு நன்றியையும் தெரிவித்துக் கொண்டார்.
பொதுமக்கள் பாதுகாப்பாக வெளியேறிய பின்னரே
இஸ்ரேல் பிணைக்கைதிகள் 134 பேர் ராஃபாவில் அடைத்துவைக்கப்பட்டிருப்பதாக கருதப்படும் நிலையில், ஹமாஸ் அமைப்பின் தலைவர்களும் அங்கு தஞ்சமடைந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேவேளையில், ராஃபாவில் உள்ள பொதுமக்கள் அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேறிய பின்னரே, இஸ்ரேல் இராணுவம் தாக்குதல்களை தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.