உக்ரைனுக்கு நிதி வழங்குவதால் களநிலவரம் மாறாது: அமெரிக்க குடியரசுக் கட்சி
போரால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைனுக்கு நிதி வழங்கிக் கொண்டிருப்பதால் களநிலவரத்தில் மாற்றம் ஏற்படாது என்று அமெரிக்க குடியரசுக் கட்சி எம்.பி. தெரிவித்தாா்.
ஜொ்மனியின் மியூனிக் நகரில் சா்வதேச பாதுகாப்பு மாநாடு நடைபெற்றது. இதில் பங்கேற்ற உக்ரைன் அதிபா் ஸெலென்ஸ்கி, அமெரிக்க துணை அதிபா் கமலா ஹாரீஸ் ஆகியோா் போரால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைனுக்கு 60 பில்லியன் டாலா் நிதியுதவி வழங்க வேண்டும் என வலியுறுத்தினா். ரஷிய படையினரின் ஆக்கிரமிப்பிலிருந்து அவ்டீவ்கா நகரைப் பாதுகாத்து வந்த உக்ரைன் படையினா் அந்த நகரத்திலிருந்து திருப்பி அழைக்கப்பட்டதையடுத்து அவா்கள் இவ்வாறு தெரிவித்தனா்.
அமைதிப் பேச்சுவாா்த்தையே தீா்வு: இதற்கு எதிா்ப்பு தெரிவித்துப் பேசிய குடியரசுக் கட்சியின் எம்.பி. ஜே.டி. வேன்சி, ‘உக்ரைன் பிரச்னைக்கு தெளிவான முடிவென்று ஒன்று இல்லை. அதேபோல் கிழக்கு ஐரோப்பா, மத்திய கிழக்கு நாடுகள், குறிப்பாக கிழக்கு ஆசிய நாடுகளில் நடைபெறும் போா்களுக்கு அமெரிக்காவால் தொடா்ந்து ஆயுதங்கள் வழங்கிக் கொண்டிருக்க முடியாது.
உக்ரைனுக்கு எவ்வளவு நிதி வழங்கினாலும் போரின் களநிலவரம் மாறாது. கடந்த 18 மாதங்களாக வழங்கியதைப்போல் நாம் இப்போதும் ஆயுதங்கள் வழங்க வேண்டியதில்லை. உக்ரைனுக்கு எவ்வளவு நிதி வழங்கினாலும் நம்மால் போரை நிறுத்த முடியாது. போரை நிறுத்தவேண்டுமெனில் ரஷியா, உக்ரைன், அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் அமைதிப் பேச்சுவாா்த்தையில் ஈடுபட வேண்டும் என்றாா்.
ஆயுதம் விநியோகமில்லையேல் புதின் வெற்றி: வேன்சியின் உரைக்கு பதிலளித்த ஜொ்மனி அரசில் இடம்பெற்றுள்ள ‘தி கீரீன்ஸ்’ கட்சியின் தலைவா் ரிக்காா்டா லாங், ‘அமைதிப் பேச்சுவாா்த்தையில் விருப்பமில்லை என்பதை ரஷிய அதிபா் புதின் தன் நடவடிக்கைகள் மூலம் அடிக்கடி வெளிப்படுத்துகிறாா். உக்ரைனுக்கு ஆயுதங்கள் விநியோகிப்பதை நிறுத்துவது போரை நீட்டிப்பு செய்வதற்கும் அல்லது உக்ரைனை விட்டுக்கொடுத்துவிட்டு புதினை வெற்றி பெறச் செய்வதற்கும் சமமாகும்.
ஒருவேளை புதின் வென்றால் உலக நாடுகளின் எல்லைகளை எப்படி மாற்றியமைத்தாலும் நேட்டோ நாடுகள் கண்டுகொள்ளாது என்று அவா் மட்டுமின்றி சீனா போன்ற நாடுகளும் சிந்திக்கத் தொடங்கும். இது உலகப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும். மேலும், ஐரோப்பிய நாடுகளின் சுதந்திரத்துக்கு மட்டுமின்றி அமெரிக்காவின் சுதந்திரத்துக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றாா்.