புதிதாக 24 குடியிருப்புகள் கட்டவிருக்கும் இளவரசர் வில்லியம்: நெகிழ வைக்கும் காரணம்
வீடற்ற நிலையில் உள்ள உள்ளூர் மக்களுக்கு தற்காலிக தங்குமிடங்களை வழங்குவதற்காக 24 வீடுகளை கட்டும் திட்டத்தை வேல்ஸ் இளவரசர் வில்லியம் அறிவித்துள்ளார்.
இளவரசர் வில்லியம் திட்டம்
குறித்த குடியிருப்புகள் அனைத்தும் இங்கிலாந்தின் தென்மேற்கு பகுதியில் அமைய உள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. அத்துடன் வீடற்றவர்களுக்கு பயிற்சியும் வேலை வாய்ப்புக்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட உள்ளது.
சொந்த வீடு போன்ற உள்கட்டமைப்புடன் உயர்தர வீடுகளை நிறுவ இளவரசர் வில்லியம் திட்டமிட்டுள்ளார். எதிர்வரும் செப்டம்பர் மாதம் கட்டுமான பணிகள் தொடங்க உள்ளது. வெளியான தரவுகளின் அடிப்படையில் முதல் வீடானது அடுத்த ஆண்டு இலையுதிர்காலத்தில் முடிக்கப்படும் என்றே கூறப்படுகிறது.
கடந்த ஆண்டு இளவரசரின் அறக்கட்டளை ஹோம்வார்ட்ஸ் திட்டத்திற்கு நிதியளிக்க £3m வழங்குவதாக அறிவித்தது, இந்த திட்டத்தினூடாக வீடற்ற மக்களுக்கு அவர்களின் சூழ்நிலைகளைப் பொருட்படுத்தாமல் நிரந்தர தங்குமிடத்திற்கு உதவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
மட்டுமின்றி, குறைவான வருவாய் கொண்ட மக்களுக்காக, குறைந்த வாடகை கட்டணத்தில் தரமான குடியிருப்புகளை வழங்கவும் திட்டமிடப்பட்டு வருகிறது. மேலும், குறைந்த வாடகை வசூலிக்கும் வகையில் 400 வீடுகளை புதிதாக கட்டவும், இன்னொரு 475 வீடுகளுக்கான திட்டமும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
சுமார் 3.4 பில்லியன் பவுண்டுகள்
ஆனால், இளவரசர் வில்லியம் முன்னெடுக்கும் இந்த திட்டமானது வெறும் கண் துடைப்பு என்றே அரச குடும்ப எதிர்ப்பாளர்கள் தெரிவிக்கின்றனர். அடுத்த 10 ஆண்டுகளில் பிரித்தானியா அரசாங்கம் அரச குடும்பத்திற்கு என சுமார் 3.4 பில்லியன் பவுண்டுகள் வரையில் செலவிடலாம்.
அந்த தொகையை ஏன் வீடற்ற மக்களுக்கு உதவும் வகையில் குடியிருப்புகளுக்கு என செலவிடக் கூடாது என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர். பிரித்தானியாவில் 2010ல் கன்சர்வேடிவ் கட்சி ஆட்சிக்கு வந்ததில் இருந்து, குறைந்த கட்டண வீடுகளுக்கான நிதியில் 63 சதவிகிதம் குறைக்கப்பட்டுள்ளது.
மேலும், 2022-23 இல் இங்கிலாந்தில் 9,561 சமூக வீடுகள் மட்டுமே வழங்கப்பட்டன. இது கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் 40,000 என இருந்துள்ளது. மேலும், இங்கிலாந்தில் 125,000க்கும் மேற்பட்ட குழந்தைகள் உட்பட 100,000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் தற்காலிக தங்குமிடங்களில் வாழ்கின்றனர், இது 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகமாகும்.
இந்த நிலையில் இளவரசர் வில்லியம் முன்னெடுக்கும் திட்டத்தை வரவேற்றுள்ள அமைப்புகள், அனைத்து அரசியல் கட்சிகளும் இளவரசரின் வழியைப் பின்பற்றி, ஆண்டுக்கு 90,000 சமூக வீடுகளைக் கட்ட உறுதியளிக்க வேண்டும், எனவே வீடற்ற அனைவருக்கும் வீடு என்ற நிலை உருவாகும் என தெரிவித்துள்ளன.