ஊழியர் ஒருவருக்கு 300 சதவீதம் அதிக சம்பளம்: இன்ப அதிர்ச்சி கொடுத்த கூகுள்!
கடந்த 2023 இறுதியில் உலகிற்கு அறிமுகம் செய்யப்பட்ட “ஆர்டிஃபிஷியல் இன்டெலிஜன்ஸ்” (Artificial Intelligence) எனும் “செயற்கை நுண்ணறிவு” தொழில்நுட்பம், கூகுள் நிறுவன தேடல் இயந்திரத்திற்கு சவாலாக இருந்து வருகிறது.
செயற்கை நுண்ணறிவு துறையில் பல்வேறு ஆராய்ச்சிகளை முன்னெடுக்க சென்னை இந்திய தொழில்நுட்ப கழகத்தின் (IIT) முன்னாள் மாணவரான அரவிந்த் ஸ்ரீனிவாஸ் மற்றும் 3 பேர் இணைந்து 2022ல் உருவாக்கிய நிறுவனம், பெர்ப்லெக்சிடி. இந்நிறுவனத்தின் தேடல் இயந்திரம், “பெர்ப்லெக்சிடி ஏஐ” (Perplexity AI).
பெர்ப்லெக்சிடி நிறுவனத்தில் பணியாற்ற கூகுள் நிறுவன “தேடல்” (search) பிரிவை சேர்ந்த ஊழியர் ஒருவர், கூகுள் மேலதிகாரிகளிடம் தனது ராஜினாமாவை சமர்ப்பித்துள்ளார்.
எனினும், அந்த ஊழியருக்கு கூகுள், அவர் வாங்கி வரும் ஊதியத்தை விட 300 சதவீதம் அதிகம் வழங்கி அவரை தங்களுடனேயே தக்க வைத்து கொண்டது.
ஒரு பேட்டியில் இந்த தகவலை பகிர்ந்து கொண்ட அரவிந்த் ஸ்ரீனிவாஸ் மேலும் கூறியதாவது,
செயற்கை நுண்ணறிவு துறையில் இல்லாமல் தேடல் துறை பணியாளராக இருந்தும் எங்களிடம் பணியாற்ற விரும்பிய நபரை கூகுள் மிக அதிக தொகையை ஈடாக தந்து, தக்க வைத்து வைத்து கொண்டது. இது மிகவும் ஆச்சரியத்தை அளிக்கிறது.
பணிநீக்கங்களை பொறுத்தவரையில் மென்பொருள் தொழில்நுட்ப மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் அதிக ஊதியம் பெறும் ஊழியர்கள்தான் குறி வைக்கப்படுவதாக தெரிகிறது என அரவிந்த் தெரிவித்தார்.