தெருநாய்களால் பாதிப்பு: இனப்பெருக்கத் தடை மையங்களை மேம்படுத்த ரூ.20 கோடி
சென்னை: தமிழகம் முழுவதும் பொதுமக்களுக்கு தெருநாய்களால் ஏற்பட்டு வரும் பாதிப்புகளை கருத்தில் கொண்டு இனப்பெருக்கத் தடை மையங்களை மேம்படுத்த ரூ.20 கோடி ஒதுக்கீடு செய்யப்படவுள்ளது.
தமிழக நிதிநிலை அறிக்கையில் கூறியிருப்பதாவது: கரோனா பெருந்தொற்றுக் காலத்தில் உரிய இனப்பெருக்கத் தடை சிகிச்சைத் திட்டங்களை நடைமுறைப்படுத்த இயலாமல் போனதால், மாநிலத்தில் பல இடங்களில் தெருநாய்களின் எண்ணிக்கை உயா்ந்துள்ளது. இதனால் பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து அரசின் கவனத்துக்கு வந்துள்ளன.
எனவே, விலங்குகள் இனப்பெருக்கத் தடை திட்டத்தை மேலும் முறையாகச் செயல்படுத்தவும், தமிழகத்தில் பல இடங்களில் செயல்பட்டு வரும் இனப்பெருக்கத் தடை மையங்களை மேம்படுத்தவும் 2024-2025-ஆம் ஆண்டு வரவு- செலவுத் திட்ட மதிப்பீடுகளில் ரூ.20 கோடி ஒதுக்கப்படும். மேலும் தமிழ்நாடு விலங்குகள் நல வாரியத்துக்கு வரும் நிதியாண்டில் ரூ.11 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.