உயர்நீதிமன்றில் நிகழ்ந்த நெகிழ்ச்சி சம்பவம்
நாடு முழுவதும் உரையாடலைத் தூண்டும் ஒரு நெகிழ்ச்சி சம்பவம் உயர்நீதிமன்றில் நிகழ்ந்துள்ளது.
மூன்று பொலிஸார் தாங்கள் முன்னர் கைது செய்த 88 வயது மூத்த குடிமகன் சம்பந்தப்பட்ட உயர்நீதிமன்ற விசாரணையின் போது முழந்தாழிட்டு மன்னிப்பு கோரியுள்ளனர்.
பச்சாதாபம், பணிவு மற்றும் நல்லிணக்கத்தின் ஒரு அரிய காட்சியாக இந்த செயல் பரவலான கவனத்தையும் பாராட்டுகளையும் பெற்றுள்ளது.
அடிப்படை உரிமைகள்
இந்த கைது தொடர்பில் 2017 ஆம் ஆண்டு மனுதாரர் அடிப்படை உரிமைகள் மனு ஒன்றை தாக்கல் செய்தார் இந்தநிலையில் இரண்டு தரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட தீர்வின் ஒரு பகுதியாகவே நாரஹேன்பிட்டி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் மூன்று பொலிஸார் 88 வயதான மனுதாரர் கோட்வின் பெரேராவிடம் எதிர்பாராதவகையில் முழந்தாழிட்டு மன்னிப்பைக் கோரியுள்ளனர்.
முன்னதாக குப்பைகளை சேகரிக்கும் போது பிரச்சினையில் ஒருவர் குறித்து பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்க நடவடிக்கை எடுத்ததாக மனுதாரர் கோட்வின் பெரேரா தனது மனுவில் தெரிவித்திருந்தார்.
எனினும் நாரஹேன்பிட்டி பொலிஸாரால் தாம் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டதாகவும், பின்னர் பொலிஸாரின் அறையில் அடைக்கப்பட்டதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
கைது நடவடிக்கை
இந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதியர்களான விஜித் மலல்கொட, அச்சல வெங்கப்புலி மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகிய மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் விசாரணைக்கு வந்த போது, மனுதாரர் இந்த விடயத்தை இணக்கத்துடன் தீர்ப்பதற்கு விருப்பம் தெரிவித்தார்.
இந்தநிலையில் மனுதாரரின் கைது நடவடிக்கையின் போது தங்கள் செயலுக்கு மூன்று பொலிஸ் அதிகாரிகளும் முழந்தாழிட்டு மன்னிப்புக் கோரியதால் நீதிமன்ற அறை அமைதியானது.
இதனையடுத்து எதிர்காலத்தில் இதுபோன்ற குற்றங்களை மீண்டும் செய்யாமல் இருக்குமாறு மூன்று பொலிஸாரையும் நீதிமன்றம் கடுமையாக எச்சரித்தது.