இலங்கை இந்தியாவின் அங்கமென கூறிய ஹரின்: நாடாளுமன்றில் வெடித்தது சர்ச்சை
இலங்கை இந்தியாவின் ஒரு பகுதி என சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ இந்தியாவில் தெரிவித்த கருத்து அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ நிலைப்பாடா அல்லது அவரது தனிப்பட்ட கருத்தா என்பதை அரசாங்கம் நாடாளுமன்றத்திற்கு அறிவிக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச கோரியுள்ளார்.
இலங்கை இந்தியாவின் ஒரு பகுதி என அமைச்சர் இந்தியாவில் தெரிவித்ததாகவும், மூன்று விமான நிலையங்களும் இந்தியாவுக்கு வழங்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டதாக விமல் வீரவன்ச நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
அமைச்சரின் அறிக்கை அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ நிலைப்பாடா? அல்லது அமைச்சரவையின் கூட்டு நிலைப்பாடா?அல்லது அமைச்சரின் தனிப்பட்ட கருத்தா என்பதை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும்.
அமைச்சரின் கூற்று
ஒரு நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தும் போது அமைச்சர் ஒருவர் அவ்வாறான கருத்தை வெளியிட முடியுமா? என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதன்போது, அமைச்சரவையில் அவ்வாறான விடயங்கள் எதனையும் விவாதிக்கவில்லை என தெரிவித்த அரசாங்கத்தின் பிரதம அமைப்பாளர் பிரசன்ன ரணதுங்க, இது தொடர்பில் சம்பந்தப்பட்ட அமைச்சர் நாடாளுமன்றத்தில் தெளிவுப்படுத்துவார் எனவும் குறிப்பிட்டார்.
அமைச்சரின் கூற்றை சமூக ஊடகங்கள் திரிபுபடுத்தியுள்ளதாக தெரிவித்த அமைச்சர் மனுஷ நாணயக்கார, அவரின் முழுமையான அறிக்கையை யாராவது செவிமடுத்தால் அவரின் யோசனை தெளிவாகும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
“இரு நாடுகளுக்கிடையிலான வரலாற்று மற்றும் பாரம்பரிய உறவை சுட்டிக்காட்டும் அதே வேளையில், இந்தியர்களை இலங்கைக்கு விஜயம் செய்யுமாறே அமைச்சர் வேண்டுகோள் விடுத்தார்,” என்று அவர் கூறியுள்ளார்.
இந்நிலையில், அமைச்சர் தனது அறிக்கையை மறுக்கவில்லை என்றும், இந்தியாவில் தெரிவித்த கருத்துக்கள் குறித்து, அவர் உத்தியோகபூர்வ அறிவிப்பை வெளியிட வேண்டும் என்றும் வீரவன்ச வலியுறுத்தியுள்ளார்.