நீதிபதியாக தேர்வான சலவைத் தொழிலாளி மகன்! காஞ்சிபுர இளைஞருக்கு குவியும் வாழ்த்து
தமிழக மாவட்டம் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த இளைஞர், சிவில் நீதிபதியாக தேர்ச்சி அடைந்ததன் மூலம் வாழ்த்துக்களை பெற்றுள்ளார்.
சிவில் தேர்வில் வெற்றி
கடந்த ஆண்டு ஆகத்து மாதம் நடந்த சிவில் தேர்வில் 12,500 பேர் எழுதினர். இதில் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த பாலாஜி என்பரும் எழுதியிருந்தார்.
அதில் தேர்ச்சி பெற்ற பாலாஜி, நவம்பர் மாதம் நடைபெற்ற இறுதி தேர்விலும் தேர்ச்சி பெற்று, நேர்முகத் தேர்விலும் சிறப்பாக செயல்பட்டார்.
இதன்மூலம் 11ஆம் திகதி வெளியான தேர்வு முடிவுகளின்படி, பாலாஜி சிவில் நீதிபதியாக தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டம் சேக்குப்பேட்டை சாலியர் தெருவைச் சேர்ந்த இவர், சலவை தொழிலாளி கணேசன் என்பவரின் மகன் ஆவார்.
8 மணிநேரம் வரை படிப்பு
பள்ளிப்படிப்பை முடித்த பாலாஜி வழக்கறிஞர் ஆக வேண்டும் என்பதற்காக சட்டக்கல்லூரியில் பயின்று, காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சுகப்பிரியன் என்பவரிடம் பணிபுரிந்து வந்தார்.
தேர்வில் வெற்றி பெற்றது குறித்து பாலாஜி கூறுகையில், ‘சீனியர் வழக்கறிஞர்கள் பலர் எனக்கு அறிவுரை வழங்கினர், அவர்களின் வழிகாட்டுதலுடன் படித்தேன். தேர்வில் வெற்றி பெற நாள் ஒன்றுக்கு 8 மணிநேரம் வரை படிப்பிற்காக செலவு செய்தேன்.
எனது பணி காலத்தில் நேர்மையாகவும், வழக்குகளை விரைந்து முடிக்கும் நிலையை கையாளுவேன். இளம் வழக்கறிஞர்கள் காவல் நிலையம் செல்லாமல் நீதிமன்றத்தில் வழக்குகளை நேர்மையாக முடிக்க வேண்டும் என்பதே எனது ஆசை’ என தெரிவித்துள்ளார்.