அடுத்த மாதம் திருமணம்.. சிரித்த முகமாக இருக்க பற்களுக்கு அறுவை சிகிச்சை செய்த புதுமாப்பிள்ளை உயிரிழப்பு
புன்னகை மேம்பாடு என்ற பெயரில் அறுவை சிகிச்சை மேற்கொண்ட புதுமாப்பிள்ளை உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புன்னகை மேம்பாடு சிகிச்சை
ஹைதராபாத்தைச் சேர்ந்த லக்ஷ்மி நாராயண விஞ்சம் (28) என்பவருக்கு அடுத்த மாதம் திருமணம் நடைபெற இருந்தது. அதற்கான வேலைகளை அவர் பார்த்து வந்துள்ளார். கடந்த வாரம் நிச்சயதார்த்தமும் நடைபெற்று முடிந்தது.
இவர், தனது நண்பர்கள் சிலர் கூறியதால் புன்னகை மேம்பாடு சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்தார். அதாவது, முகம் இன்னும் சிரித்தவாறு இருந்தால் இன்னும் அழகாக இருக்கும் என்று கூறியதன் பேரில், திருமணத்திற்கு முன்பு புன்னகையை அதிகரிக்க என்ன வழி என்பதை யோசித்தார்.
அப்போது, ஹைதராபாத்தின் முன்னணி பல் மருத்துவமனை ஒன்று, புன்னகை அதிகரிப்புக்கான சிகிச்சை அளிப்பதாக அறிந்த லக்ஷ்மி நாராயண விஞ்சம் விசாரிக்க ஆரம்பித்தார்.
புதுமாப்பிள்ளை உயிரிழப்பு
இதன்பின்னர், பிப்ரவரி 16 -ம் திகதி ஹைதராபாத் ஜூப்லி ஹில்ஸில் உள்ள ‘எஃப்.எம்.எஸ் சர்வதேச பல் மருத்துவமனை’யில் ‘Smile Designing’ அறுவை சிகிச்சைக்கு அனுமதித்தார். பின்னர், 2 மணிநேரம் தொடர்ந்த அறுவை சிகிச்சையில் புதுமாப்பிள்ளை பரிதாபமாக உயிரிழந்தார்.
இவர், பெற்றோர் யாரிடமும் அறுவை சிகிச்சை மேற்கொண்டதை தெரிவிக்காதது பொலிஸ் விசாரணையில் தெரிவந்துள்ளது. இந்த சம்பவத்தில், மயக்க மருந்தினை அதிகம் கொடுத்ததே மகன் லஷ்மி நாராயணன் உயிரிழக்க காரணம் என்று அவரது தந்தை புகார் அளித்துள்ளார்.
அதன்படி, மருத்துவ ஆவணங்கள் மற்றும் சிசிடிவி பதிவுகளை கைப்பற்றிய பொலிஸார் விசாரணை செய்து வருகின்றனர். இந்த வழக்கில், முதற்கட்ட நடவடிக்கையாக அறுவை சிகிச்சையில் மருத்துவமனை அலட்சியம் காட்டியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.