ரூ 4,200 நன்கொடை… தேசத்துரோக குற்றச்சாட்டில் கைதான அமெரிக்க – ரஷ்ய பெண்மணி
உக்ரேனிய அமைப்புகளுக்காக நிதி திரட்டியதுடன், உக்ரைனுக்கு எதிரான ரஷ்ய போருக்கு வெளிப்படையாக எதிர்ப்பு தெரிவித்த பெண் ஒருவரை தேசத்துரோக குற்றச்சாட்டில் ரஷ்யா கைது செய்துள்ளது.
வெள்ளைமாளிகை கோரிக்கை
குறித்த கைது நடவடிக்கை தொடர்பான தகவல்களை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று வெள்ளைமாளிகை தற்போது கோரிக்கை வைத்துள்ளது. அமெரிக்க – ரஷ்யரான Ksenia Khavana என்பவரே தேசத்துரோக குற்றச்சாட்டில் கைதானவர்.
உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா போர் தொடுத்த 2022 பிப்ரவரி மாதம் இவர் உக்ரைன் அமைப்பு ஒன்றிற்கு 51 டொலர் நன்கொடையாக அளித்துள்ளார். இதுவே அவரை தேசத்துரோக வழக்கில் சிக்க வைத்துள்ளது.
இவர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால், 20 ஆண்டுகள் வரையில் சிறை தண்டனை விதிக்கப்படலாம். லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் குடியிருக்கும் 33 வயது Ksenia Khavana கைது செய்யப்பட்டுள்ளதை ரஷ்யாவின் FSB உறுதி செய்துள்ளது.
தொண்டு நிறுவனம் ஒன்றிற்கு
அமெரிக்க குடிமக்கள் ரஷ்யாவுக்கு பயணப்படுது தொடர்பில் ஏற்கனவே எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், இந்த கைது நடவடிக்கை வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
இதனிடையே, பிரான்சில் உள்ள ரஷ்ய தூதரகத்தின் முன்னாள் ஆலோசகருக்கு தேசத்துரோக குற்றச்சாட்டில் 18 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து ரஷ்ய நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கைதிகள் விடுவிப்பது தொடர்பில் அமெரிக்க அதிகாரிகளுடனான பேச்சுவார்த்தை நடந்து வருவதாக ரஷ்ய ஜனாதிபதி புடின் உறுதி செய்வதற்கு முன்னர் Ksenia Khavana கைது நடவடிக்கை வெளியாகியுள்ளது.
போரில் காயமடையும் உக்ரைன் வீரர்களுக்கு மருத்துவ உதவி அளிக்கும் வகையில் நடவடிக்கை எடுத்துவரும் தொண்டு நிறுவனம் ஒன்றிற்கு Ksenia Khavana 51 டொலர் (ரூ 4,227) நன்கொடை அளித்துள்ளார் என்றே கூறப்படுகிறது.