இலங்கைக்கு வருகை தரவுள்ள ஈரான் அதிபர்
ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி விரைவில் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் ஹுசைன் அமீர் அப்துல்லாஹின் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ள ஈரான் வெளிவிவகார அமைச்சர், செய்தியாளர் மாநாடு ஒன்றில் கலந்துக் கொண்ட போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அதிபர் ரணில் விக்ரமசிங்கவுடன் கலந்துரையாடலில் ஈடுபட்ட ஈரான் வெளிவிவகார அமைச்சர், இலங்கையுடனான விரிவாக்கப்பட்ட பொருளாதார ஒத்துழைப்புக்கான வழிகளை ஆராய ஈரானின் ஆர்வத்தையும் சுட்டிக்காட்டியுள்ளார்.
தேயிலை ஏற்றுமதி
அத்தோடு, அவர் இலங்கைக்கான சுற்றுலாவை வளர்ப்பதற்கும், இரு நாடுகளுக்கிடையிலான கலாச்சார உறவுகளை வலுப்படுத்துவதற்கும் ஈரானின் அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.
அதேநேரம், மசகு எண்ணெய்க்காக இலங்கை ஈரானுக்கு செலுத்த வேண்டிய 250 மில்லியன் டொலருக்கு பதிலாக இலங்கையிலிருந்து தேயிலையை ஏற்றுமதி செய்யவதற்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.