தமிழகம் முழுவதும் கிடுகிடுவென உயர்ந்த அரிசியின் விலை.., சென்னையில் மட்டும் இவ்வளவு உயர்ந்துள்ளதா?
தமிழகம் முழுவதும் உயர்ந்த அரிசியின் விலையால் ஹொட்டல்களில் உள்ள உணவின் விலையும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
என்ன காரணம்?
தமிழகத்தில் உள்ள காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை, சம்பா, தாளடி பருவங்களில் 15 லட்சம் ஏக்கரில் நெல் சாகுபடி செய்வார்கள். ஆனால், கடந்த ஆண்டு குறுவை பருவத்தில் போதிய அளவு தண்ணீர் இல்லாததால் மேட்டூர் அணை ஒக்டோபர் மாதமே மூடப்பட்டது.
இதனால், இருந்த தண்ணீரை வைத்து விவசாயிகள் குறுவை அறுவடையை முடித்தனர். அதே போல சம்பா சாகுபடிக்கு போதிய அளவு மழையில்லை. திருவாரூர், மயிலாடுதுறை, நாகை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு நாட்கள் பெய்த மழையால் வயல்களில் தண்ணீர் தேங்கி பாதித்தது.
இந்த காரணத்தினால் தமிழகத்தில் விளைச்சல் இல்லாததால் கர்நாடகா, ஆந்திரா, சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு அரிசி வினியோகம் செய்யப்படுகிறது. இதனால் கடந்த 4 மாதங்களாகவே தமிழ்நாடு முழுவதும் அரிசி விலை அதிகரித்து வருகிறது.
எவ்வளவு உயர்ந்துள்ளது?
சென்னையில் ஏற்கனவே மொத்த விலையில் கிலோவுக்கு ரூ.60 -க்கு விற்ற புழுங்கல் அரிசி ரூ.68 ஆகவும், ரூ.60 -க்கு விற்ற வேகவைத்த அரிசி ரூ.70 ஆகவும், ரூ.37-க்கு விற்ற இட்லி அரிசி ரூ.40 ஆகவும் உயர்ந்துள்ளது. மேலும், பாஸ்மதி அரிசி ரூ.120-க்கும், பழுப்பு அரிசி ரூ.39 -க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அதோடு பிராண்ட் அரிசியும் கிலோவுக்கு ரூ.10 வரை உயர்ந்துள்ளது. சென்னையில் சில்லரை விற்பனையில் அரிசியின் விலை கிலோவுக்கு ரூ.15 முதல் ரூ.17 வரை உயர்ந்துள்ளது.
இந்த காரணத்தினால் ஹொட்டல்களில் விற்கப்படும் இட்லி, தோசை போன்ற உணவுகளின் விலையும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.