;
Athirady Tamil News

விமான நிலையத்திற்கு காணி சுவீகரிப்பு – விபரங்களைக் கோரி ஜனாதிபதியின் செயலாளர் கடிதம்

0

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்துக்கென விடுவிக்கப்பட்ட காணிகளில் 500 ஏக்கரை மீள அளவீடு செய்வது தொடர்பாக பணிகளின் அறிக்கைகளை அனுப்பி வைக்குமாறு ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்கவால் துறைமுகங்கள், கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சின் செயலாளர் ருவன் சந்திரவுக்கு கடிதம் அனுப்பபட்டுள்ளது.

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலைய விஸ்தரிப்புக்கென மக்கள் மீள குடியேறியுள்ள வலி வடக்கு பிரதேசத்தின் குரும்பசிட்டி J/242, கட்டுவன் J/238, கட்டுவன் மேற்கு J/239, குப்பிளான் வடக்கு J/211, மயிலிட்டி தெற்கு J/240 கிராமங்களில் காணி அளவீடுகள் இடம்பெறுவதாக மக்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அது தொடர்பில் ஜனாதிபதியின் கவனத்துக்கு யாழ்,கிளிநொச்சி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளருமான அங்கஜன் இராமநாதன் எழுத்துமூலம் தெரியப்படுத்தியிருந்தார்.

இதனையடுத்து, குறித்த காணி அளவீடுகள் தொடர்பான விரிவான அறிக்கையை எதிர்வரும் மார்ச் 5ம் திகதிக்கு முன்பாக ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்க வேண்டும் என ஜனாதிபதி செயலகத்தினால் துறைமுகங்கள், கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சின் செயலாளருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை கடந்த 16.02.2024 அன்று நடைபெற்ற யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்திலும் இவ்விடயம் அங்கஜன் இராமநாதனால் முன்வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.