கோட்டா கோ ஹோம் போராட்டத்தில் கலந்து கொண்ட பிரிட்டன் யுவதிக்கு அபராதம்
முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவின் ஆட்சிக்கு எதிரான கோட்டா கோ ஹோம் போராட்டக்களத்தில் கலந்து கொண்ட பிரிட்டன் யுவதிக்கு 250,000 ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
மேன்முறையீட்டு நீதிமன்றம் இந்த அபராத தொகையை விதித்துள்ளது. கடந்த 2022ம் ஆண்டு கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சிக்கு எதிராக நடைபெற்ற கோட்டா கோ கம, போராட்டக்களத்தில் பிரிட்டன் யுவதியான கெலி பிரேசர் என்பவர் பங்கு கொண்டிருந்தார்.
சுற்றுலா வீசா
சமூக வலைத்தளங்களிலும் போராட்டத்துக்கு ஆதரவான கருத்துக்களையும் காணொளிகளையும் பதிவு செய்திருந்தார். சுற்றுலா வீசாவில் வந்து உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுதல் வீசா விதிமுறைகளை மீறும் செயல் எனத் தெரிவிக்கப்பட்டு, குடிவரவு, குடியகல்வுத் திணைக்களம் கெலி பிரேசரின் வீசாவை ரத்துச் செய்தது.
அத்துடன் 2022ம் ஆண்டின் ஒக்டோபர் 22ம் திகதிக்கு முன்னதாக இலங்கையை விட்டும் வெளியேறுமாறும் உத்தரவிடப்பட்டது. அதன் பின் தலைமறைவான கெலி பிரேசர், தான் தொடர்ந்தும் இலங்கையில் தங்கியிருக்க அனுமதிக்குமாறு சட்டத்தரணியொருவர் மூலம் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
எனினும் மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்துள்ளது அத்துடன் வீசா இன்றி நாட்டில் இருந்த காலப்பகுதிக்கான அபராதமாக 250,000 ரூபா அபராதம் விதித்துள்ளது. அபராதத் தொகையை செலுத்துமாறும், உடனடியாக இலங்கையில் இருந்து வெளியேறுமாறும் கெலி பிரேசருக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.