தெலங்கானா பிஆர்எஸ் எம்எல்ஏ லாஸ்யா நந்திதா கார் விபத்தில் பலி
தெலங்கானா மாநிலம் செகந்திராபாத் கன்டோன்மென்ட் தொகுதி பிஆர்எஸ் கட்சி சட்டப்பேரவை உறுப்பினர் லாஸ்யா நந்திதா(37) கார் விபத்தில் வெள்ளிக்கிழமை பலியானார்.
பாரத ராஷ்டிர சமிதி(பிஆர்எஸ்) கட்சி சட்டப்பேரவை உறுப்பினரான லாஸ்யா நந்திதா தனது காரில் வெள்ளிக்கிழமை காலை ஹைதராபாத் ஓஆர்ஆர் சாலையில் சென்றுகொண்டிருந்தார்.
அப்போது, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலை தடுப்புச் சுவர் மோதி விபத்துக்குள்ளானது. இதில், படுகாயமடைந்த லாஸ்யாவை அருகில் இருந்தோர் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் லாஸ்யாவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
படுகாயமடைந்த ஓட்டுநர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப் பதிவி செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பிஆர்எஸ் கட்சி எம்எல்ஏ கார் விபத்தில் பலியான சம்பவம் கட்சியினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிஆர்எஸ் எம்எல்ஏ லாஸ்யா நந்திதா மறைவுக்கு பிஆர்எஸ் தலைவர் கே. சந்திரசேகர ராவ் இரங்கல் தெரிவித்துள்ளார்.
முதல்வர் ரேவந்த் ரெட்டி இரங்கல்
தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள இரங்கல் செய்தியில், கன்டோன்மென்ட் சட்டப்பேரவை உறுப்பினர் லாஸ்யா நந்திதாவின் அகால மரணம் என்னை மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. நந்திதாவின் தந்தை ஸ்வர்கிய சயன்னாவுடன் எனக்கு நெருங்கிய தொடர்பு இருந்தது. அவர் கடந்த ஆண்டு இதே மாதத்தில் இறந்தார்.அதே மாதத்தில் திடீரென நந்திதாவும் மரணம் அடைந்தது மிகவும் வருத்தமளிக்கிறது. அவர்களது குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்பதாக என அவர் தெரிவித்துள்ளார்.