உணவு டெலிவரி தாமதம்; இலங்கையர் மீது துப்பாக்கிச்சூடு; அதிர்ச்சி சம்பவம்!
குவைத்தில் சாரதியாக பணிபுரியும் இலங்கையர் ஒருவர் , உணவு ஓர்டர் தாமதமாக எடுத்து வந்ததாக கூறி துப்பாக்கியால் சுடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சம்பவத்தில் ராஜாங்கனையைச் சேர்ந்த கே.பி.லக்ஷ்மன் திலகரத்ன என்ற 44 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையே சுடப்பட்டுள்ளார்.
பலத்த காயம் ஏற்பட்டு 30 தையல்கள்
சுமார் 8 வருடங்களாக குவைத்தில் பணிபுரிந்து வரும் இவர் இறுதியாக கடந்த அக்டோபரில் இலங்கைக்கு வந்துள்ளார். உணவு ஓர்டர்களை எடுத்துச் செல்லும் ஓட்டுநராக பணிபுரியும் அவர் , கடந்த ஜனவரி 10 ஆம் திகதி கிடைக்கப்பெற்ற ஓர்டரை எடுத்துச் செல்லும் போது இந்த சம்பவத்துக்கு முகம் கொடுத்துள்ளார்.
உணவு ஓர்டர் தாமதமாக எடுத்து வந்ததாக கூறி சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர் தன்னை சுட்டதாக காயமடைந்த நபர் தெரிவித்துள்ளார். துப்பாக்கிச்சூட்டில் அடிவயிற்றில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகவும், அவருக்கு 30 தையல்கள் போடப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
துப்பாக்கிச் சூட்டில் காயம் அடைந்தவர் மீண்டும் தனது காரில் வந்து காரை இடையில் நிறுத்திவிட்டு தனது இந்தோனேஷிய நண்பருக்கு அழைத்து நடந்த சம்பவத்தை கூறியுள்ளார்.
அதன் பிறகு அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். பாதிக்கப்பட்ட நபருக்கு 13 வயது மற்றும் 10 வயதுடைய இரண்டு மகள்கள் உள்ள நிலையில் தனக்கு நீதியை பெற்றுக் கொடுத்து, மீண்டும் நாட்டுக்கு அழைத்துக் கொள்ளுமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.