ஆன்லைன் மோசடியில் இது புதுசு… ஸ்விக்கி அக்கவுண்ட்டை முடக்கி ரூ.97 ஆயிரத்திற்கு உணவுகள் ஆர்டர்!
டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் உலக அளவில் இந்திய முன்னணியில் இருக்கிறது. பல நாடுகளுக்கு முன்னோடியாகவும் இருக்கின்றது. நம் பேண்ட் பாக்கெட்டில் வைத்திருந்த பர்ஸ்களை லாவகமாக உருவியெடுத்த கூட்டம், தொழில்நுட்ப யுகத்திலும் தங்கள் குணங்களை மாற்றிக் கொள்ளவில்லை.
தொழில்நுட்பத்திற்கு தகுந்தவாறு மோசடித் திறன்களை வளர்த்துக் கொண்டு ஆன்லைன் திருட்டில் ஈடுபட்டு வருகின்றனர். நம் வங்கிக் கணக்கை முடக்கி பணம் திருடுவது, ஏதோ ஒரு சேவைக்காக நம்மை நம்ப வைத்து ஏமாற்றி பெரும் தொகையை நம்மிடம் இருந்தே பெறுவது போன்ற ஆன்லைன் மோசடிகள் தினந்தோறும் நடந்த வண்ணம் இருக்கின்றன. அதில் சமீபத்திய வரவாக ஸ்விக்கி அக்கவுண்ட் மோசடி நடைபெற்றுள்ளது.
ஸ்விக்கியில் அடிக்கடி உணவு வாங்கும் வாடிக்கையாளர்கள், டிஜிட்டல் பரிவர்த்தனைகளை எளிமையாக மேற்கொள்ளும் வகையில் LazyPay, BNPL (Buy Now Pay Later) போன்ற வசதிகள் வழங்கப்பட்டிருந்தனர். நாம் பிஸியாக இருக்கின்ற சமயங்களில் பாஸ்வேர்டு எல்லாம் கொடுத்து பணம் செலுத்த சிரமம் ஏற்படும் என்று கருதி, மிக எளிமையாக பணம் செலுத்துகின்ற இந்த வசதிகளை ஸ்விக்கி நிறுவனம் செயல்படுத்தி வந்தது. ஆனால், இந்த லேசிபே அக்கவுண்ட் வைத்திருந்த பெண்ணிடம் தான் மோசடி நடைபெற்றுள்ளது என்பதைக் கண்டறிந்து தற்போது இந்த பேமெண்ட் முறைகளை ஸ்விக்கி நீக்கிவிட்டது.
மோசடி நடந்தது எப்படி?
அனிகேத் கல்ரா என்ற 25 வயது நபரும், ஹிமான்ஷு குமார் என்ற 23 வயது நபரும் இந்த மோசடி தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளனர். சுமார் 26 வயது கொண்ட பெண்ணுக்கு, நள்ளிரவு நேரத்தில் இவர்கள் ஃபோன் செய்து, ஐவிஆர் குரல் அழைப்பு போலவே பேசியிருக்கின்றனர். அந்தப் பெண்ணின் ஸ்விக்கி அக்கவுண்டை யாரோ முடக்க முயற்சி செய்வதாகவும், அதைத் தவிர்க்க வேண்டும் என்றால் ஸ்விக்கி அக்கவுண்ட் ஐடி, பாஸ்வேர்டு, வங்கிக் கணக்கு விவரம் போன்றவற்றை தெரிவிக்க வேண்டும் என்று ஐவிஆர்எஸ் மூலமாகவே மோசடியாளர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதனால் குழப்பமும், அச்சமும் அடைந்த இந்தப் பெண், தான் ஏமாறக் கூடாது என்று நினைத்து கடைசியாக மோசடியாளர்களின் வலையிலேயே வீழ்ந்துவிட்டார். அந்தப் பெண்ணின் கணக்கை முடக்கிய மோசடியாளர்கள், அதன் மூலம் ரூ.97,197 மதிப்பிலான உணவு மற்றும் மளிகை பொருட்களை ஆர்டர் செய்திருந்தனர். இதையறிந்த அந்தப் பெண் கொடுத்த புகாரின் பேரில் மோசடியாளர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மோசடியாளர்களில் ஒருவரான அனிகேத் கல்ரா, இதற்கு முன்பு ஸ்விக்கி, சொமேட்டோ ஆகிய நிறுவனங்களில் டெலிவரி ஏஜெண்டாக பணி செய்து வந்துள்ளார். அப்போதே, மளிகை பொருட்களை ஆஃபர்களைப் பயன்படுத்தி வாங்கி, அதை 5 முதல் 10 சதவீத லாபத்தில் விற்பனை செய்து வந்துள்ளார். அதேபோல, ஸ்விக்கி, சொமேட்டோ போன்றவற்றில் கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு உள்ளிட்டவை இணைக்கப்பட்ட பல அக்கவுண்ட் விவரங்கள் ஹிமான்ஷு குமாருக்கு கிடைத்துள்ளது. இந்த இருவரும் சேர்ந்து மோசடி வேலைகளில் ஈடுபட்டு வந்துள்ளனர்.