தேர்தலுக்கு தொகுதிகளை ஒதுக்கியது திமுக… எந்தெந்த கட்சிகளுக்கு என்னென்ன தொகுதி?
திமுக கூட்டணியில் முதல் கட்சியாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு, தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக மூத்த நிர்வாகிகள் உடன் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியினர் 2-ஆம் கட்ட தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுடன் தொகுதி பங்கீடு கையெழுத்தானது. கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன், திமுக கூட்டணியில் தங்களுக்கு ராமநாதபுரம் தொகுதி வழங்கப்பட்டிருப்பதாக கூறினார்.
தற்போதைய எம்.பி., நவாஸ் கனி மீண்டும் போட்டியிட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். ஏணி சின்னத்தில் போட்டியிடவுள்ளதாக கூறிய அவர், மாநிலங்களவை உறுப்பினர் பதவி குறித்து தேர்தலுக்குப் பிறகு ஆலோசிக்கலாம் என திமுக குழுவினர் கூறியதாகவும் தெரிவித்தார்.
அதேபோல திமுக கூட்டணியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு மீண்டும் நாமக்கல் நாடாளுமன்ற தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. செய்தியாளர்கள் சந்திப்பில் கூறிய அவர், 2019ஆம் ஆண்டை போலவே ஒரு தொகுதியில் போட்டியிடவுள்ளதாகவும் அதே நாமக்கல் தொகுதியில் போட்டியிட ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாகவும் கூறினார். தமிழ்நாடு, புதுச்சேரி என 40 தொகுதிகளிலும் தங்கள் கூட்டணி வெற்றி வாகை சூடும் எனவும் அவர் தெரிவித்தார்.