;
Athirady Tamil News

ரஷ்யா மீது அமெரிக்கா மேலும் பொருளாதார தடை விதிப்பு

0

உக்ரைன் போர் மற்றும் நவால்னி மரணம் ஆகிய விவகாரத்தில் ரஷ்யா மீது மேலும் பொருளாதார தடைகளை அமெரிக்கா விதித்துள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா தொடங்கிய போர் நேற்றுடன் 2 ஆண்டுகள் நிறைவடந்து 3-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. உக்ரைனுக்கு ஆதரவாக உள்ள அமெரிக்கா, ரஷ்யா மீது பொருளாதார தடைகளை விதித்தது.

இதற்கிடையே ரஷ்ய எதிர்க்கட்சி தலைவர் நவால்னி சிறையில் மரணம் அடைந்ததற்கு ரஷ்ய அதிபர் புடின்தான் பொறுப்பேற்க வேண்டும் என்று அமெரிக்கா தெரிவித்தது.

மேலும் நவால்னி மனைவியை அமெரிக்க அதிபர் ஜோபைடன் சந்தித்து ஆறுதல் கூறினார்.

அப்போது நவால்னியின் மறைவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக ரஷியாவின் பொருளாதாரம், தொழில் துறையை பாதிக்கும் வகையில் பல புதிய தடைகள் விதிக்கப்படும் என்று ஜோபைடன் தெரிவித்தார்.

இந்த நிலையில் உக்ரைன் போர்-நவால்னி மரணம் விவகாரத்தில் ரஷ்யா மீது மேலும் பொருளாதார தடைகளை அமெரிக்கா விதித்துள்ளது.

ரஷ்யாவை சேர்ந்த நிறுவனங்கள் தனி நபர்கள் உள்பட 500 இலக்குகள் மீது புதிய பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டுள்ளது.

உக்ரைன் மீது போர் தொடங்கியதில் இருந்து ஒரே நாளில் அதிகளவில் ரஷ்யா மீது அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்துள்ளது.

இதுகுறித்து அமெரிக்க அதிபர் ஜோபைடன் கூறும் போது, நாவல்னியின் சிறை வாசத்துடன் தொடர்புடைய நபர்கள், ரஷியாவின் நிதித் துறை, பாதுகாப்பு, தொழில் துறை, உள்ளிட்டவை மீது பொருளாதார தடை விதிக்கப்படுகிறது.

ரஷ்யாவின் போருக்கு ஆதரவாக உள்ள 100 நிறுவனங்களுக்கு புதிய ஏற்றுமதி கட்டுப்பாடுகள் விதிக்கிறோம் என்றார்.

இதே போல் சீனா உள்ளிட்ட சில நாடுகள் மீதும் அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்துள்ளது. இதற்கிடையே ரஷ்ய எதிர்க்கட்சி தலைவர் நவால்னி உடலை அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்க ரஷ்ய அரசு நிபந்தனைகளை விதித்துள்ளது.

நவால்னி உடலை பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கக் கூடாது. உடல் அடக்கத்தினை ரகசியமாக நடத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.