ஜோ பைடன் தலைமையில் தோற்பது உறுதி: உலகப் போர் தொடர்பில் ட்ரம்ப் ஆருடம்
அமெரிக்க ஜனாதிபதியாக ஜோ பைடன் மீண்டும் தெரிவு செய்யப்பட்டால், அவரது தலைமையில் மூன்றாம் உலகப் போரில் அமெரிக்கா தோற்பது உறுதி என்று டொனால்டு ட்ரம்ப் தமது ஆதரவாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
சுதந்திரத்திற்கான நுழைவுச்சீட்டு
ட்ரம்புக்கு அளிக்கும் ஒரு வாக்கு என்பது உங்கள் சுதந்திரத்திற்கான நுழைவுச்சீட்டு என குறிப்பிட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், மிக மோசமான சூழலில் நாம் வாழ்கிறோம் என்றார்.
எதிர்வரும் தேர்தலில் ஜோ பைடன் வென்றால், மூன்றாம் உலகப் போரில் அமெரிக்கா தோற்பது உறுதி என்றார். ஜோ பைடன் ஆட்சி என்பது குற்றச்செயல்கள் மலிந்து, ரணகளமாக இருக்கும் என்று 4 ஆண்டுகளுக்கு முன்னரே தாம் குறிப்பிட்டிருந்ததாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
ஜோ பைடன் வென்றால் அமெரிக்க மக்களுக்கு மிக மோசமான நாட்களாகவே இருக்கப் போகிறது. நவம்பர் 5 நமக்கு புதிய விடுதலை நாளாக இருக்கும் என குறிப்பிட்டுள்ள ட்ரம்ப், பொய்யர்களுக்கும், ஏமாற்றுக்காரர்களுக்கும், அது அவர்களின் இறுதித் தீர்ப்பு நாளாக இருக்கும் என்றார்.
ஒரே நாளில் கட்டுக்குள்
ட்ரம்பை நீங்கள் ஜனாதிபதியாக வெள்ளைமாளிகைக்கு அனுப்புங்கள், அவர் உலகின் அனைத்தையும் பார்த்துக் கொள்வார் என்று ஹங்கேரியின் விவாதத்துக்குரிய பிரதமர் viktor orbán குறிப்பிட்டிருந்ததை ட்ரம்ப் சுட்டிக்காட்டியுள்ளார்.
அமெரிக்காவில் அதிகரிக்கும் குற்றச்செயல்களை தம்மால் ஒரே நாளில் கட்டுக்குள் கொண்டுவர முடியும் என குறிப்பிட்டுள்ள ட்ரம்ப், பொலிசாருக்கு முழு அதிகாரம் அளித்தால் போதும் என்றார்.