புதிய சின்னம் குறித்து மொட்டுக்கட்சியின் முடிவு! ரணிலுடன் பேச்சுவார்த்தைக்கு தயாராகும் பசில்
அதிபர் தேர்தல் வேட்பாளரை தெரிவு செய்வதில் பொதுஜன பெரமுனவுக்குள் பிளவுகள் ஏற்பட்டுள்ள நிலையில் பஷில் ராஜபக்ஷ ரணில் விக்கிரமசிங்கவை சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விசேட சந்திப்பானது எதிர்வரும் மார்ச் மாதம் 3ஆம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவுள்ளது.
அதிபர் வேட்பாளரை மையப்படுத்தி ஆளும் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள பிளவுகளை சமநிலைப்படுத்தவே பஷில் ராஜபக்ஷ அவசரமாக நாடு திரும்புவதாக அந்த தகவல்கள் மேலும் கூறியுள்ளன.
ரணிலுக்கு மீண்டும் ஆதரவு
அதிபர் ரணில் விக்ரமசிங்கவுக்கு மீண்டும் ஆதரவு வழங்க வேண்டும் என்று கோரிக்கையை பொதுஜன பெரமுனவில் ஒருதரப்பு முன்வைத்துள்ள நிலையில், மற்றுமொரு தரப்பு அதனை எதிர்த்து வருகிறது.
இதனால் கட்சிக்குள் நாளுக்கு நாள் முரண்பாடுகளும் பிளவுகளும் தீவிரமடைந்து வருகின்றன.
மகிந்த ராஜபக்ஷ, நாமல் ராஜபக்ஷ மற்றும் சாகர காரியவசம் ஆகியோரை தொடர்ந்தும் தொலைப்பேசி ஊடாக தொடர்புகொண்டு நாட்டின் அரசியல் நிலைமைகளையும் கட்சியின் செயல்பாடுகளையும் பஷில் ராஜபக்ஷ கருத்தில் கொண்டிருந்தார்.
25 வீத மக்கள் ஆதரவு
அதே போன்று பொதுஜன பெரமுனவுக்கு கிராமிய மட்டத்தில் உள்ள மக்கள் ஆதரவுகள் குறித்தும் பல்வேறு வகையில் கணிப்புகளை அவர் முன்னெடுத்திருந்தார்.
இதன் பிரகாரம், 20 வீதம் தொடக்கம் 25 வீதம் வரையிலான மக்கள் ஆதரவு கிராமிய மட்டத்தில் இன்னும் உள்ளதாக பசில் ராஜபக்ஸவுக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
இந்த மக்கள் ஆதரவை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்லக்கூடிய வகையில் பொதுஜன பெரமுவின் அரசியல் செயல்பாடுகள் அமைய வேண்டும் என்பதே பசில் ராஜபக்ஸவின் ஆலோசனையாக உள்ளது.
மஹிந்த ராஜபக்ஷ, நாமல் ராஜபக்ஷ மற்றும் சாகர காரியவசம் ஆகியோருடன் இடம்பெற்ற சந்திப்பின்போது பஷில் ராஜபக்ஷ இந்த விடயத்தை வலியுறுத்தியுள்ளார்.
கட்சியின் சின்னம்
இதன்போது பொதுஜன பெரமுன எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மாற்று அரசியல் கட்சியுடன் இணைந்து கட்சியின் சின்னத்தை புதுப்பித்துக்கொண்டு அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது என்ற தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறானதொரு நிலையிலேயே பஷில் ராஜபக்ஷ இவ்வாரம் இறுதியில் நாடு திரும்புகிறார்.
ரணில் விக்கிரமசிங்கவுக்கும் பஷில் ராஜபக்ஷ தலைமையிலான பொதுஜன பெரமுனவுக்கும் இடையில் மார்ச் 3ஆம் திகதி கலந்துரையாடலை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஓரிரு நாட்கள் வேறுபட்டாலும் இந்த சந்திப்பு மார்ச் மாதம் முதல் வாரத்தில் இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.