யாழில். இரண்டு உயிரிழப்புக்கள் ஏற்பட்ட பின்னரும் தொடரும் ஆபத்தான பயணங்கள்
யாழ்ப்பாணத்தில் கடந்த வாரம் பேருந்தின் மிதிபலகையில் இருந்து தவறி விழுந்து இருவர் உயிரிழந்துள்ள நிலையிலும் , பேருந்தின் மிதிபலகையில் தொங்கியவாறு ஆபத்தான பயணங்களை இன்னமும் தொடர்கின்றனர்.
பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட சிலர் யாழ். நகர் பகுதியில் இருந்து காரைநகர் நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபை பேருந்தில் , மிதிபலகையில் தொங்கியவாறு பயணிக்கும் போது , வீதியோரமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த வாகனத்துடன் மோதுண்டு விழும் காட்சிகளை ஒருவர் கையடக்க தொலைபேசியில் பதிவு செய்து , தனது சமூக வலைத்தளத்தில் பதிவேற்றியுள்ளார்.
குறித்த காணொளி தற்போது வைரலாகி வருகிறது.
யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டி பகுதியில் கடந்த 19ஆம் திகதி பேருந்தினை நிறுத்த முதல் , பெண்ணொருவர் இறங்க முற்பட்ட வேளை தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். அதேவேளை கடந்த 23ஆம் திகதி நல்லூர் ஆலயத்திற்கு முன்பாக பேருந்தின் மிதி பலகையில் பயணித்த இளைஞன் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.
இரு உயிரிழப்புக்கள் அண்மையில் இடம்பெற்ற நிலையிலும் , ஆபத்தான மிதிபலகை பயணத்திற்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.