;
Athirady Tamil News

அமைச்சர் ஐ.பெரியசாமியை விடுவித்த உத்தரவு ரத்து – உயர் நீதிமன்றம் அதிரடி

0

கடந்த 2008-ம் ஆண்டு தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்துக்குச் சொந்தமான வீட்டை மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பாதுகாவலராக இருந்த கணேசன் என்பவருக்கு ஒதுக்கியதில் முறைகேடு செய்ததாக, அப்போது வீட்டு வசதித்துறை அமைச்சராக இருந்த ஐ.பெரியசாமிக்கு எதிராக கடந்த 2012-ம் ஆண்டு , அதிமுக ஆட்சியின் போது லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் இருந்து அமைச்சர் ஐ.பெரியசாமியை விடுவித்து சென்னை எம்.பி, எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் கடந்த 2023ம் ஆண்டு மார்ச் மாதம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை மறு ஆய்வு செய்யும் வகையில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்திருந்தார்.

இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்து தீர்ப்பு தள்ளி வைக்கப்பட்டிருந்த நிலையில், இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், அமைச்சர் ஐ.பெரிய சாமியை விடுவித்து சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார்.

மேலும் ஊழல் தடுப்பு சட்ட வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் உள்ள இந்த வழக்கின் விசாரணையை மார்ச் 26 ஆம் தேதிக்குள் எம்.பி மற்றும் எம்.எல்.ஏ’க்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

பின்னர், மார்ச் 28ஆம் தேதி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் எம்.பி மற்றும் எம்.எல்.ஏ’க்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி ஒரு லட்சம் ரூபாய்க்காண பிணையை செலுத்த வேண்டும் எனவும், குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஆஜராக விட்டால் அவர்களுக்கு எதிராக சிறப்பு நீதிமன்றம் பிடிவாரண்டு பிறப்பிக்கலாம் என்றும் நீதிபதி உத்தரவிட்டிருக்கிறார்.

தினந்தோறும் வழக்கின் விசாரணையை நடத்த வேண்டும் என்று சிறப்பு நீதிமன்றத்திற்கு உத்தரவிட்ட நீதிபதி ஆனந்த வெங்கடேஷ், வழக்கின் விசாரணையை ஜூலை மாதத்திற்குள் முடித்து உயர் நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.