கருணாநிதியின் நினைவிடம்! உள்ளிருக்கும் முக்கிய அம்சங்கள்
தமிழ் நாட்டின் முன்னாள் முதல்வரான கருணாநிதியின் நினைவிடம் இன்று மாலை தமிழ் நாட்டு முதல்வர் மு.க.ஸ்டாலினால் திறக்கப்படவுள்ளது.
சென்னை மெரினா கடற்கரையில் தி.மு.க. முன்னாள் தலைவரும், தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதியின் உடல் அடக்கம் செய்யப்பட்ட பகுதியிலேயே இந்த நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது.
பேரறிஞர் அண்ணாவின் நினைவிட வளாகத்தில், 2.23 ஏக்கர் பரப்பளவில் இந்த நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளதுடன், பேரறிஞர் அண்ணாவின் நினைவிடமும் தமிழ் நாட்டு அரசாங்கத்தினால் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இவை இரண்டு மக்கள் பார்வைக்காக இன்று தமிழ் நாட்டின் முதல்வர் மு.க.ஸ்டாலினால் திறந்துவைக்கப்படவுள்ளது. கருணாநிதியின் நினைவிடத்தில் கருணாநிதி அமர்ந்த நிலையில் எழுதும் வடிவிலான சிலை அமைக்கப்பட்டுள்ளது.
அதன் முன்பாக இருபுறமும், தமிழ் செம்மொழி என மத்திய அரசாங்கம் ஏற்ற முடிவை பாராட்டி காங்கிரஸின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி கருணாநிதிக்கு எழுதிய கடிதம் ஆங்கிலத்திலும் தமிழிலும் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த சதுக்கத்தின் கீழே நிலவறைப் பகுதியில் கலைஞர் உலகம் எனும் பெயரில் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது.
இதன் இடதுபுறத்திலுள்ள, நடைபாதையின் வலப்புறத்தில் திருவள்ளுவர் சிலை, குடிசை மாற்றுவாரியம் ஆகியன விளக்கொளியுடன் படங்களாக அமைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.